ஹட்டனில் 10 பேருக்கு கொரோனா ...!

ஹட்டனில் 10 பேருக்கு கொரோனா ...!

ஹற்றன் நகரில் மேலும் 10 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது

இந்த நிலையில், சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, ஹற்றன் நகர வர்த்தகர்கள் இன்றைய தினம் தங்களது வர்த்தக நிலையங்களை மூடி, ஒத்துழைப்பு வழங்குமாறு ஹற்றன் - டிக்கோயா நகர சபை கோரிக்கை விடுத்துள்ளது.

ஹற்றன் - டிக்கோயா நகர சபையின் தலைவர் எஸ்.பாலச்சந்திரன்  தெரிவித்தார்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் 5 பேருக்கு கொரோனா 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர், வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மூவர் தென் பகுதியைச் சேர்ந்தவர்கள் மற்றும், இருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.

நேற்றைய தினம் வடமாகாணத்தின் பல இடங்களிலிருந்ததும், 162 பேருக்கான கொரோனா பரிசோதனைகள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.

அவர்களில் தொற்றுறுதியான ஒருவர், கோப்பாய் தனிமைப்படுத்தல் முகாமல் இருந்த நிலையில், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இருவர் மேலதிக சிகிச்சைக்காக வெலிகந்த வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஒருவர் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவராவார்.

குருநகரைச் சேர்ந்த இருவர் பேலியகொடை மீன் சந்தை தொடர்புடையவர்கள் என்றும், ஒருவர் மன்னார் பகுதியில் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த தென் பகுதியை சேர்ந்தவர் என்றும் வைத்தியர் சத்தியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமுலாக்கப்படுவதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை கருணாகரன் அறிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கோரளைப்பற்று மத்தியில் மாத்திரம் நேற்று மேலும் 16 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக நேற்றைய தினம் அவர் அறிவித்தார்.

இதேவேளை, பேலியகொடை கொத்தணி தொடர்பின் அடிப்படையில் மன்னாரில் கொரோனா தொற்றுறுதியான இருவர் கொழும்பில் இருந்து மன்னாருக்கு பயணித்த பேருந்துகள் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் இருந்து கடந்த 20 ஆம் திகதி இரவு 11.20 அளவில் மன்னார் நோக்கி பயணித்த ரத்னா ரவல்ஸ் என்ற தனியார் பேரூந்தில் பயணித்தவர்களும்

21 ஆம் திகதி காலை 8.45 அளவில் மன்னாரில் இருந்து தலைமன்னார் நோக்கி அரச பேரூந்தில் பயணித்தவர்களும்,

23 ஆம் திகதி மாலை 4 மணிக்கு கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி எச். ஏ ரவலஸ் சாதாரண பேருந்தில் பயணித்தவர்களும்,

0718 474 361 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொண்டு தகவல் வழங்குமாறு மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் கோரிக்கை விடுத்துள்ளார்.