கொரோனாவால் திணறும் ஸ்பெயின் - தேசிய ரீதியில் அமுலாகும் ஊரடங்கு

கொரோனாவால் திணறும் ஸ்பெயின் - தேசிய ரீதியில் அமுலாகும் ஊரடங்கு

தீவிரமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் ஸ்பெயின் அரசாங்கம் அவசர நிலைமையை பிரகடனப்படுத்தியுள்ளது.

இதன்கீழ் தேசிய ரீதியில் ஊரடங்கு உத்தரவையும் அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது.

புதிததாக கொண்டுவரப்பட்டுள்ள அவசர கால நிலைமையின் கீழ் பிராந்தியங்களுக்கு இடையிலான பயணங்களை பிராந்திய அதிகாரிகள் தடைசெய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் நேற்றிரவு முதல் கனறி தீவுகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பிராந்தியங்களும் இரவு 11 மணி முதல் காலை 06 மணி வரை ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்த வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அடுத்த இரண்டு வாரங்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் அவசர நிலைமை நீடிக்கப்பட வேண்டுமாயின் அரசியலமைப்பின் பிரகாரம் நாடாளுமன்றத்தின் அனுமதி பெறப்பட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதிய கட்டுப்பாடுகளை ஆறு மாதங்கள் வரை நீடிப்பதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதியை தாம் கோரப் போவதாக ஸ்பெயின் பிரதமர் பேதுறோ சன்சே குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றின் முதல் அலைத் தாக்கத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட ஸ்பெயின், உலகில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் முடக்க நிலையை அமுல்படுத்திய நாடாகவும் பதிவாகியிருந்தது.

ஏனைய ஐரோப்பிய நாடுகளும் கடுமையான முடக்க நிலையை அமுல்படுத்தியிருந்த நிலையில், தற்போது இரண்டாம் அலைத் தொற்றின் தாக்கம் காரணமாக ஸ்பெயின் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மிகவும் மோசமான சூழலில் வாழ்வதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் பேதுறோ சன்சே, கடந்த 50 ஆண்டுகளில் மிகவும் பாரதூரமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.