61 காவல்துறை அதிகார பிரதேசங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம்...!

61 காவல்துறை அதிகார பிரதேசங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம்...!

கம்பஹா மாவட்டம் உள்ளிட்ட நாட்டிலுள்ள 61 காவல்துறை அதிகார பிரதேசங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் நீடிக்கின்றது.

இந்தநிலையில் கம்பஹா மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக அங்குள்ள அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்களை இன்றைய தினம் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமையஇ இன்று காலை 8 மணிமுதல் இரவு 10 மணிவரை அவற்றை திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கம்பஹா மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிக் கிளைகளையும் இன்றைய தினம் திறக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வங்கிக் கிளைகளை திறப்பதற்கு அவசியமான பணியாளர்கள்இ தங்களின் அலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தி சேவைக்கு சமூகமளிக்க முடியும் என கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை களுத்துறை மாவட்டத்தின் அளுத்கம பேருவளை பயாகலை முதலான காவல்துறை அதிகார பிரிவுகளில் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டமும் அவ்வாறே தொடர்கின்றது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.

குறித்த பகுதிகளில் அமுலாகும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை 5 மணியுடன் நீக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்து.

எனினும் அந்தப் பகுதிகளில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அவ்வாறே நீடிக்கும் இராணுவத் தளபதி நேற்று மாலை அறிவித்தார்.

இதேவேளை கொழும்பு மாவட்டத்தில் கோட்டை, புறக்கோட்டை, பொரளை, வெலிக்கடை முதலான காவல்துறை அதிகார பிரதேசங்களில் நேற்று முதல் மீள் அறிவித்தல்வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.