நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில்…
நாட்டில் இதுவரை 56 பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, மாளிகாவத்தை, வாழைத்தோட்டம், டேம் வீதி, ஆட்டுப்பட்டித் தெரு மற்றும் கடலோர பொலிஸ் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் நேற்றிரவு முதல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொத்தட்டுவை மற்றும் முல்லேரியா ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் நேற்று இரவு 7 மணி முதல் அமுலாகும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மருதானை மற்றும் தெமட்டகொட ஆகிய பகுதிகளுக்கும் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊடரங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, பேருவளை, பயாகலை மற்றும் அலுத்கம ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 5 மணி வரை தனிமைப்படுத்தல் ஊடரங்கு அமுல்பட்டுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, கொட்டாஞ்சேனை, முகாத்துவாரம், மட்டக்குளி, கிரேண்ட்பாஸ், வெல்லம்பிட்டி மற்றும் புளூமெண்டல் ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு ஏற்கனவே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கம்பஹா மாவட்டத்திற்கும், வடமேல் மாகாணத்தின் குளியாப்பிட்டிய, நாராம்மல, தும்மலசூரிய, பன்னல மற்றும் கிரியுல்ல ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டமானது வார இறுதிநாட்களில் மேலும் கடுமையாக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், நாடாளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு வார இறுதியில் பிறப்பிக்கப்படவுள்ளதாக சமூக வளைத்தளங்களில் வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், வெள்ளவத்தை மற்றும் பம்பலபிட்டிய பகுதிகளில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லையென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
ஆகவே, வெள்ளவத்தை மற்றும் பம்பலபிட்டிய பகுதிகளில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்திற்குட்பட்ட வாழைச்சேனை பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சுமார் 11 கொரோனா தொற்றாளர்கள் நேற்றைய தினம் அடையாளங் காணப்பட்டுள்ள நிலையிலேயே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.