மீன் விற்பனை நிலைய உரிமையாளருக்கு கொரோனா: ஹற்றன் பொதுச்சந்தை தொகுதிக்கு பூட்டு

மீன் விற்பனை நிலைய உரிமையாளருக்கு கொரோனா: ஹற்றன் பொதுச்சந்தை தொகுதிக்கு பூட்டு

ஹற்றன் நகரிலுள்ள மீன் விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளமையை தொடர்ந்து அப்பகுதியிலுள்ள பொதுச்சந்தை தொகுதி மூடப்பட்டுள்ளதாக ஹற்றன் டிக்கோயா நகரசபை பொதுசுகாதர பரிசோதகர் தெரிவித்தார்.

பேலியகொடை மீன் சந்தையில் மீன் கொள்வனவு செய்து, விற்பனை செய்பவர்கள் என அடையாளம் காணப்பட்ட மீன் விற்பனை நிலையங்கள்  அனைத்தும் நேற்று முன்தினம் மூடப்பட்டன.

மேலும், பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புடைய,அனைத்து பகுதிகளிலும் உள்ள மீன் விற்பனையாளர்கள் மற்றும் ஏனைய சிலரும் பீ.சீ.ஆர்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதன்போதே, மேற்படி நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில்  ஹற்றன் நகர் பொதுச்சந்தை உள்ளிட்ட சில பகுதிகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த நபரின் குடும்பத்தினர் அனைவரும் ஐ.டி.எச்.வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், அடையாளம் காணப்பட்டவருடன்  நேரடி தொடர்பிலிருந்தவர்கள் மற்றும் அவர் சென்ற இடங்களை அடையாளம் கண்டு அவர்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தவுள்ளதாக பொது சுகாதார பரிசோதர்கள் தெரிவித்துள்ளனர்.