கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை மாணவச் செல்வங்கள் வணங்க வேண்டும். எனவே சரஸ்வதி பூஜையையொட்டி செய்ய வேண்டியது என்ன? என்பதை இங்கே காணலாம்
வீடு, வாசல் நிலை, கதவுகள், ஜன்னல்கள் எல்லாவற்றையும் துடைத்து தூய்மை செய்து கொள்ளவும். சரஸ்வதி பூஜையன்று காலையில் எல்லாவற்றுக்கும் சந்தனம், குங்குமம் ஆகியவற்றால் பொட்டுவைத்து அலங்கரிக்கவும். பூஜை அறையின் முன்னதாக, மேஜை போட்டு பட்டுத்துணியினால் பரப்பி அதன் மீது புத்தகங்கள், பேனாக்கள், பணப்பெட்டி போன்றவற்றை வைத்து அவற்றிற்கு பொட்டு வைத்து அலங்கரிக்க வேண்டும். மற்றொரு மேஜை போட்டு அதன் மீது தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தும் உபகரணங்களை கழுவி சுத்தப்படுத்தி வைத்து அவற்றையும் பொட்டு போன்றவற்றால் அலங்கரிக்க வேண்டும்.
மாடு கன்றுகளையும், அதன் தொழுவத்திலேயே குளிப்பாட்டி சந்தனம், குங்குமம் இட்டு மாலைகளால் அலங்கரிக்க வேண்டும். இதேபோல தொழில் நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் எந்திரங்களையும் அலங்கரிக்க வேண்டும். பின்னர் இவற்றிற்கு பூஜை செய்து வழிபடுவது மிகுந்த பலனை தரும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஆயுதங்களின் பயனை உணர்த்தவே ஆயுதபூஜை செய்யப்படுகிறது. செய்யும் தொழிலே தெய்வம். அந்த தொழிலுக்கு உதவிகரமாக இருக்கும் ஆயுதங்களையும் தெய்வமாக போற்றும் விதமாக, அவற்றையும் கடவுளாக பாவித்து வணங்குவதே ஆயுதபூஜையின் சிறப்பு.