ஒத்துழைப்பு வழங்குங்கள்... இல்லையேல் நிலைமை மோசமாகும் - இலங்கை மக்களிடம் முக்கிய வேண்டுகோள்
தற்போதுள்ள சூழ்நிலையில் பொது மக்கள் முழுமையான ஒத்துழைப்பினை வழங்காது போனால் நிலைமை மோசமடையும் நிலை ஏற்படும் என்று சுகாதார சேவைகள் உதவி பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர்,
கொரோனா வைரஸின் தாக்கம் மோசமடைந்துள்ளது. இருப்பினும் இன்னும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கிறது. முதல் தடவையாக நேற்று அதிகளவில் ஒரே நாளில் தொற்றாளிகளாக 865 பேர் கண்டறியப்பட்டனர்.
இந்நிலையில் இது நடப்பு நாட்களில் அதிக கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கையாகும். எனினும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை உணரவேண்டும்.
இதன்போது பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்காது போனால் நிலைமை மோசமடையும். எனவே பொதுமக்கள் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
இதேவேளை, கோரிக்கை விடுக்கப்படுமாக இருந்தால், பொது மக்கள் தமது நடமாட்டங்களை குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.