இலங்கை ஒரு பாதுகாப்பான நாடாகும்: இலங்கைக்கான கொரிய தூதுவர் கருத்து!

இலங்கை ஒரு பாதுகாப்பான நாடாகும்: இலங்கைக்கான கொரிய தூதுவர் கருத்து!

இலங்கை ஒரு பாதுகாப்பான நாடாகும் என இலங்கைக்கான கொரிய தூதுவர் Woonjin Jeong தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையில் உள்ள வாய்ப்புகளை ஆராய, கொரிய முதலீட்டாளர்களை தான் தொடர்ந்தும் ஊக்குவித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜக்ஸவுடன், அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற இருதரப்புக் கலந்துரையாடலின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பல தசாப்தங்களுக்கு முன்னர், இலங்கையில்  பாரிய முதலீட்டாளர்களில் ஒருவராக கொரியாவும் காணப்பட்டதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையில் தற்போது 115 க்கும் மேற்பட்ட கொரிய நிறுவனங்கள் செயற்பட்டு வருகின்றன.

இதன்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான மொத்த வர்த்தகம் கடந்த ஆண்டு 327 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றுநோயைக் கையாண்ட விதம்  குறித்து அரசாங்கத்தை பாராட்டிய கொரியத் தூதுவர், கொரோனா நெருக்கடியைச் முகாமைத்துவம் செய்வதில் கொரிய அரசு, இலங்கைக்கு உறுதியான ஆதரவை வழங்கும் எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கை மற்றும் கொரிய நாடுகளுக்கு இடையிலான அந்நிய நேரடி முதலீடு, ஏற்றுமதி, சுற்றுலா மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் விடயம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.