ரிஷாட் மற்றும் ஹக்கீமை உடனடியாக வெளியேற்றுங்கள் - இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி

ரிஷாட் மற்றும் ஹக்கீமை உடனடியாக வெளியேற்றுங்கள் - இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி

நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையுடன் 20 திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. முக்கிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு கிடைத்திருப்பது கொழும்பு அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

குறிப்பாக, இரண்டு முஸ்லிம் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளித்தாலும் கட்சியின் தலைவர்கள் இருவரும் 20வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.

இந்நிலையில் ரிஷாட் பதியூதீன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு கடும் அழுத்தங்களை அக்கட்சியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொடுத்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற தேவையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றி அரசாங்கம் பலவீனமாக நிலையில் இருந்த போது, கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தின் கீழ் போட்டியிட்ட இரண்டு முஸ்லிம் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே ஆகியோரின் ஆதரவுடன் 20வது திருத்தச் சட்டம் நேற்றிரவு நிறைவேற்றப்பட்டது.

இரண்டு முஸ்லிம் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளித்தாலும் கட்சியின் தலைவர்கள் இருவரும் 20வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், இரண்டு முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலவீனமாக நடந்துக்கொண்டதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

“ இது தெளிவாக அரசாங்கத்துடன் செய்துக்கொண்ட உடன்பாடு. சகாக்களை அந்த பக்கம் அனுப்பி விட்டு, இவர்கள் மாத்திரம் இந்த பக்கம் இருந்தனர். இதனால், இவர்கள் இரண்டு பேரையும் கட்சியில் இருந்து வெளியேற்றுமாறு நாங்கள் கட்சியின் தலைவரிடம் கூறினோம். இவர்கள் இருவரையும் வெளியேற்ற வேண்டும்” எனவும் அந்த இளம் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.

ரவூப் ஹக்கீம் மற்றும் றிசாட் பதியூதீன் ஆகிய இரண்டு முஸ்லிம் தலைவர்கள், பசில் ராஜபக்சவுடன் ஏற்படுத்திக்கொண்ட இரகசியமான உடன்பாட்டின் அடிப்படையில், இவர்களது கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாட்டின் ஜனநாயக முறையில் இயங்கிய நீதிமன்றம், நாடாளுமன்ற ஆகிய தூண்களை உடைத்தெறிய உதவியமையானது நாட்டின் மகக்ளின் உரிமைகளை காட்டிக்கொடுத்த நடவடிக்கை என ஐக்கிய மக்கள் சக்தியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.