பேலியகொட மீன்சந்தையிலிருந்த கழிவு நீர் வாய்க்கால் ஊடாக தப்பிச்சென்றவர்களை பிடிக்க வலை வீச்சு

பேலியகொட மீன்சந்தையிலிருந்த கழிவு நீர் வாய்க்கால் ஊடாக தப்பிச்சென்றவர்களை பிடிக்க வலை வீச்சு

பேலியகொட மீன் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளின்படி, நேற்று (21) 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதனையடுத்து,பேலியகொட மீன் சந்தைக்குள் இருந்தவர்கள் நேற்று மாலை பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கிடையில், பி.சி.ஆர் சோதனைக்கு ஆஜராக மறுத்து, தனிமைப்படுத்தப்பட்ட ஒரு குழு, மீன் சந்தை வளாகத்திற்கு அருகே உள்ள கழிவு நீர் வாய்க்கால் ஊடாக தப்பிச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் தப்பியோடியவர்களை கண்டறிய பொலிசாரும் பொது சுகாதார பரிசோதகர்களும் தேடுதலை மேற்கொண்டுள்ளனர்.

பேலியகொட நகர சபை அதிகாரி ஒருவர் இது தொடர்பாக தெரிவிக்கையில், சந்தேக நபர்கள் சிலர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தம்மை பி.சி.ஆர் சோதனைக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டதாகத் தெரிவித்தார்.

தப்பியோடியவர்களில் போதைக்கு அடிமையானவர்களும் அடங்குவதாக சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

இன்றையதினம் (22) தப்பியோடிய பலர் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் பேலியகொட காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

தப்பியோடியவர்களின் எண்ணிக்கையை சரியாக அறிய முடியவில்லை எனவும் மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.