பாடசாலை பதில் அதிபர்களின் அனுபவங்களின் அடிப்படையில் பதவி உயர்வு

பாடசாலை பதில் அதிபர்களின் அனுபவங்களின் அடிப்படையில் பதவி உயர்வு

அதிபர் சேவைக்கு இணையாக பணியாற்றும் கடமை நிறைவேற்று பதில் அதிபர்களின் சேவை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் தரங்களை உயர்த்துவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் ஊடக பதில் அதிபர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியும் என ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் அவர்கள் கல்வி அமைச்சுக்கு ஆலோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.

ஊவா மாகாண கல்வி அபிவிருத்தி தொடர்பில் கல்வி அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தலைமையில் ஊவா மாகாண சபையில்  இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஆளுநர் முஸம்மில் குறித்த ஆலோசனையை முன்வைத்தார்.

சுமார் 166 பாடசாலைகளுக்கு அதிபர்கள் இல்லை எனவும்,  சில பாடசாலைகளில் பதில் அதிபர்கள் சுமார் 10 வருடங்களுக்கு மேல் கடமையாற்றியுள்ளதாகவும் தெரிவித்த கல்வி அமைச்சர் ஜி.எல் பீரிஸ், இவ்வாறான நிர்வாக பிரச்சினைகளைத் தீர்க்க தமது அமைச்சு அவசர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதன் போது குறுக்கிட்ட இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, நல்ல பெறுபேறுகளை வெளியிடும் பதில் அதிபர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்கவேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து கருத்து வெளியிடுகையிலேயே ஆளுநர் முஸம்மில் மேற்குறித்த ஆலோசனையைக் கல்வி அமைச்சுக்கு முன்வைத்தர்.

இதன்போது மாகாண சபை அதிகார எல்லைக்குட்பட்ட பாடசாலைகளில் காணப்படும் அதிபர் ஆசிரியர் பற்றாட்டக்குறை, அடிப்படை வசதிகள், முன் பள்ளி பாடசாலைகளில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளை நேரடியாக அமைச்சரைத் தெளிவு படுத்தினர்.

இந்த கலந்துரையாடலில் தொழிலாளர் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, தேனுக விதானகே, நாடாளுமன்ற உறுப்பினர்களான சுதர்ஷன டெனிபிடிய, ஷாமர சம்பத் தசநாயக உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர், ஊவா பல்கலைக்கழகத்தின் டீன், ஊவா கல்வி அமைச்சின் அதிகாரிகள், மாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகள், அமைச்சுக்களின் அதிகாரிகள், அதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.