உங்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் - தமிழில் வாழ்த்துரைத்த மஹிந்த

உங்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் - தமிழில் வாழ்த்துரைத்த மஹிந்த

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உங்கள் எல்லோருக்கும் நவராத்திரி தின வாழ்த்துக்கள் என தமிழ் மொழியில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்றையதினம் இடம்பெற்ற நவராத்திரி விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர்,

நாட்டைக் கட்டியெழுப்பும் ‘சுபீட்சத்தின் நோக்கு’ என்ற பயணத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஆரம்பித்திருக்கின்றோம்.

சட்டத்தை மதிக்கும் குணநலம் கொண்ட ஒழுக்கநெறியான சமூகம் ஒன்றினை நாம் அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும்.

இந்தச் சமூகத்தில் வாழ்கின்ற ஒவ்வொருவரும் ஆன்மீகத் துறையிலும் நற்பண்பிலும் மேம்பட வேண்டுமாயின், அவர்களுக்கான மத அனுஷ்டானங்களைச் சரிவரப் பின்பற்றுபவர்களாக அவர்கள் இருக்க வேண்டும்.

எமது நாட்டில் இப்பொழுது மத அனுட்டானங்களைப் பின்பற்றுவதற்கான உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எமது தாய் நாடான இலங்கை உட்பட, உலகில் எங்கெங்கெல்லாம் இந்துக்கள் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் நவராத்திரி விரதம் மற்றும் பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகியுள்ளன.

நவராத்திரி விரதம் பார்ப்பதற்கு ஒரு கொண்டாட்டம் போல இருந்தாலும் ஒரு விரதமாகவே அனுஷ்டிக்கப்படுகிறது.

அழிவு இல்லாத சிறந்த கல்விச் செல்வத்தை வழங்குகின்ற கலைமகளையும் மனத்திடத்தோடு துணிவைத்தரும் மலைமகளையும் செல்வங்களை அள்ளித்தரும் திருமகளையும் போற்றி வழிபடுவது நவராத்திரி பூஜையின் சிறப்பாகும்.

இது அர்த்தமுள்ள நல்லதொரு பூஜை வழிபாடு, ‘கொலு’ வைப்பது இந்த வழிபாட்டில் சிறப்பான ஒரு விடயம். இந்த உலக உயிர்கள் எல்லாமே எல்லோர்க்கும் மேலான சக்தியாலேதான் இயங்குகின்றன என்ற உண்மையை எங்களுக்குக்குச் சொல்லுகிறது.

ஆலயங்கள், பாடசாலைகள், நிறுவனங்கள், வீடுகள் என எல்லாத் துறைகளிலும் ‘கொலு’ வைத்து வழிபடும் இந்த நிகழ்வால் நாட்டில் சுபீட்சமும் சகவாழ்வும் இனிதே மலரட்டும்.

இந்நவராத்திரி தினத்தில் கொவிட் தொற்று இல்லாதொழிக்கப்பட்டு, அனைவரும் அனைத்து நலன்களையும் வளங்களையும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ்ந்திட பிரார்த்திக்கிறேன் எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, குடும்ப உறுப்பினர்கள், பிரதமரின் செயலாளர் காமினி செனரத், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர்களான ஜீவன் தொண்டமான், எஸ்.வியாழேந்திரன், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன், வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.