நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று..!

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று..!

நாட்டில் நேற்றைய தினம் 110 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

மினுவாங்கொடை கொத்தணியில் மாத்திரம் நேற்றைய தினம் தனிமைப்படுத்தலில் இருந்த 38 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.

அத்துடன், அவர்களுடன் தொடர்புடைய 72 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதாகவும் இராணுவத்தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, மினுவாங்கொடை கொத்தணியில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 899 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களில் மேலும் 5 பேர் குணமடைந்து நேற்று மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்

இதற்கமைய கொவிட் 19 தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை மூவாயிரத்து 385 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலையத்தில் உள்ள தொழிற்சாலைகளில் அடையாளம் காணப்பட்ட தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 180 வரையில் அதிகரித்துள்ளது.

நேற்றைய தினத்தில் மாத்திரம் அங்கு 930 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, அவிஸாவளை மருத்துவமனையில் இருந்து கொஸ்கம சாலவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதனையடுத்து அவருடன் தொடர்புடைய முச்சக்கரவண்டியின் சாரதி சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

பேராதெனிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளின் பின்னர் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியானதாக காவற்துறை தெரிவித்துள்ளது.