வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கான வாக்குரிமையைப் பெற்றுக் கொடுக்க திட்டம்..!
வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கான வாக்குரிமையைப் பெற்றுக் கொடுப்பது உள்ளிட்ட தேர்தல் விதிதிருத்தத்தை மேற்கொள்வதற்கான நாடாளுமன்றக் குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனை ஒன்றை முன்வைக்க உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, தேர்தல்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டியது அவசியமாகும் என குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துவதில் திருத்தங்களை மேற்கொள்ளல், தேர்தல் இடம்பெறும் தினத்தில் வாக்களிப்பதற்கு முடியாதவர்களுக்கு அதற்கு முன்னதாக ஒரு தினத்தில் வாக்களிக்க வாய்ப்பளித்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் 18 வயது பூரணமானவர்களுக்கு வாக்குரிமையை பெற்றுக் கொடுக்கும் வகையில் வாக்காளர் பட்டியலை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை புதுப்பித்தல், தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தல், வாக்களிப்பு நிலையங்களில் விசேட தேவையுடையோருக்கான வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் பிரதமருக்கு விளக்கமளித்துள்ளனர்.