வடக்கிலும் கொரோனா சிகிச்சை நிலையங்கள் - இரு வாரங்கள் காலக்கெடு

வடக்கிலும் கொரோனா சிகிச்சை நிலையங்கள் - இரு வாரங்கள் காலக்கெடு

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான கொரோனா சிகிச்சை நிலையங்கள் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய அமைக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, யாழ். மாவட்டத்துக்கான சிகிச்சை நிலையமாக மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை தெரிவு செய்யப்பட்டு அங்கு சிகிச்சைப் பிரிவு அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 19ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் மருதங்கேணி ஆரம்ப வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையமாக தயார் நிலையில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு வைத்தியசாலைக்கு அண்மையில் உள்ள கட்டடத் தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்துக்கான கொரோனா சிகிச்சை நிலையம் கிருஷ்ணபுரம் பகுதியில் அமைக்கப்பட்டு வருகிறது. 2 வாரங்களுள் புனரமைப்புப் பணிகளை நிறைவு செய்யுமாறு சுகாதார அமைச்சால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுமார் 100 படுக்கைகளைக் கொண்டதாக இந்த சிகிச்சை நிலையம் அமைக்கப்படுகிறது.

தற்போது கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஆளுகைக்குள் இருக்கும் காணியிலேயே இந்த சிகிச்சை நிலையம் அமைக்கப்படுகிறது.