படிப்படியாக விலை குறையும் - அமைச்சர் உறுதி
நுகர்வோரின் நலன் கருதியே அரசாங்கம் வெங்காயத்திற்கான இறக்குமதி வரியை குறைத்துள்ளதாகவும் அதன் பிரதிபலனாக சில தினங்களில் நுகர்வோர குறைந்த விலையில் சந்தையில் வெங்காயத்தை கொள்வனவு செய்ய முடியும் என்றும் வர்த்தக, நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்கம் கடந்த காலங்களில் உள்ளூர் விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் வெங்காயத்திற்கான இறக்குமதி வரியை 50 வீதமாக அதிகரித்தது. எனினும் அதனை வாய்ப்பாக்கிக்கொண்டு உள்ளூர் உற்பத்தியாளர்கள் அதிக விலைக்கு வெங்காயத்தை விற்பனை செய்ய முற்பட்டனர்.
200 ரூபா, 210 ரூபா பின்னர் 230 ரூபாவுக்கும் வெங்காயத்தின் விலையை அதிகரித்தனர். அதனால் நுகர்வோர் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். அதனைக் கருத்திற்கொண்டே அரசாங்கம் வெங்காயத்திற்கான இறக்குமதி வரியை 25 வீதமாக குறைத்துள்ளது. அதன் பிரதிபலன் நுகர்வோரை சென்றடைய வேண்டும் என்பதில் அரசாங்கம் அவதானத்துடன் செயற்படுகின்றது.
சந்தையில் ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்டுள்ள வெங்காயம் கையிருப்பில் உள்ளதால் அது முடிவடைந்ததும் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்படும். அதற்கிணங்க படிப்படியாக விலை குறைப்பை நுகர்வோர் பெற்றுக்கொள்ள முடியும்.
அதேவேளை, இதனால் உள்ளூர் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர் என ஊடகங்கள் மூலம் தெரிவிக்கப்படுகின்றதே? என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், வெங்காயத்தை 130 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ச.தொ.ச மூலம் அதனை கொள்வனவு செய்யும் வகையில் அதன் தலைவருக்கு உரிய பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. நட்டப்பட்டாவது உள்ளூர் விவசாயிகளை பாதுகாப்பதற்கு இவ்வாறு ச.தொ.ச மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.