இன்று அதிகாலை 5 மணி தொடக்கம் மற்றுமொரு பகுதிக்கும் காவற்துறை ஊரடங்கு உத்தரவு

இன்று அதிகாலை 5 மணி தொடக்கம் மற்றுமொரு பகுதிக்கும் காவற்துறை ஊரடங்கு உத்தரவு

கட்டுநாயக்க காவல்துறை அதிகாரத்திற்கு உட்பட்ட பிரதேசங்களில் இன்று காலை 5 மணி முதல் காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

காவல்துறை ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் ஏற்கனவே 18 காவல்துறை அதிகார பிரதேசங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட போதிலும் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள தொழிற்சாலைகளை நடாத்திச் செல்ல முடியும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வலயத்தில் பணியாற்றும் பணியாளர்கள் ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரமாக தங்களது தொழிற்சாலை அடையாள அட்டைகளை பயன்படுத்த முடியும் எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் காவற்துறை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள 18 காவற்துறை பிரிவுகளில் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்துள்ளது.

37 வாகனங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவற்துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்று முதல் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை சப்ரகமுவ மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு வருமான உத்தரவு பத்திர விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் நோக்கிலே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.