உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு யார் பொறுப்பு..? முன்னாள் ஜனாதிபதி தெரிவித்த விடயம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு யார் பொறுப்பு..? முன்னாள் ஜனாதிபதி தெரிவித்த விடயம்

ஏப்ரல் 21 தாக்குதல்களை தடுக்காமை தொடர்பில் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன, முன்னாள் தேசிய புலனாய்வு பிரதானி சிசிர மெண்டிஸ், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் உள்ள காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரே பொறுப்பு கூற வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று இரண்டாவது முறையாகவும் சாட்சியம் வழங்கிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

தற்போது கட்டாய விடுமுறையில் உள்ள காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர, காவல்துறைமா அதிபராக இருந்து அந்த பதவிக்கு பொருத்தமற்ற பல விடயங்களை செய்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்துடன் தான் வழங்கும் உத்தரவுகளை நடைமுறைப்படுத்தக் கூடாது என மத்திய வங்கி உள்ளிட்ட அரச நிறுவனங்ளின் பிரதானிகளுக்கு, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியிருந்ததாகவும் அவர் சாட்சியம் வழங்கியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அரசியல் அழுத்தங்கள் என்பனவற்றின் அடிப்படையிலேயே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணை நடவடிக்கைகள் இடம்பெற்றதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.