கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய தொழிற்சாலைகளில் 39 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்
காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்ட பகுதிகள் தவிர்ந்த, ஏனைய சில பகுதிகளில் இருந்து வருகைதரும் ஊழியர்களைக் கொண்டு, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தி நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர வர்த்தக வலய உற்பத்தியாளர்களின் சங்கத்தின் செயலாளர் தம்மிக்க பெர்ணான்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியிருந்த சிலர் அடையாளம் காணப்பட்ட இரண்டு தொழிற்சாலைகளில், உற்பத்தி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் நேற்றைய தினம், 22 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.
இதற்கமைய, அங்கு இதுவரையில் 39 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுறுதியான சிலர் நடமாடியமை காரணமாக, பொறளை நகரில் உள்ள 6 வர்த்தக நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
காவல்துறை ஊடகப் பேச்சாளர், பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இந்தத் தகவலை வெளியிட்டார்.