கொள்ளுபிடிய பிரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையின் 7 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று

கொள்ளுபிடிய பிரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையின் 7 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று

கொள்ளுபிட்டியில் அமைந்துள்ள பிரெண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலையின் பிரதான அலுவலகத்தின் பணியாளர்கள் 7 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ரூவாண் விஜயமுனி இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்றுறுதியானவர்களில் சிலர் நடமாடியதாக கூறப்படும் பொறளை பகுதியில் உள்ள 6 வர்த்தக நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மினுவாங்கொடை பிரெண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலை கொத்தணியில் நேற்றைய தினம் 90 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.

அவர்களில் 40 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், ஏனைய 50 பேரும் அவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, மினுவாங்கொடை கொத்தணியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 397 ஆக உயர்வடைந்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 844 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்ட பகுதிகள் தவிர்ந்த, ஏனைய சில பகுதிகளில் இருந்து வருகைதரும் ஊழியர்களைக் கொண்டு, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தி நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர வர்த்தக வலய உற்பத்தியாளர்களின் சங்கத்தின் செயலாளர் தம்மிக்க பெர்ணான்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியிருந்த சிலர் அடையாளம் காணப்பட்ட இரண்டு தொழிற்சாலைகளில், உற்பத்தி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றின் மேலும் 35 பணியாளர்களுக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

இதற்கமைய, அந்த வலயத்தில் இதுவரையில் 74 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மன்னாரில் பெரியக்கடை மற்றும் பட்டித்தோட்டம் ஆகிய இடங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

5 பேர் கொவிட் 19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் குறித்த பகுதிகள் தனிமைப்படுத்தபட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை அதிலிருந்து விடுவிக்கப்பட்டன.

இந்த நிலையில் மன்னாரில் பல இடங்களில் தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

மன்னார் காவல்துறையினர் விசேட அதிரடிப்படையினர், பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் மன்னார் நகர சபை ஆகியவை இணைந்து தொற்று நீக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அரச வைத்தியசாலைகளில் வாராந்த சிகிச்சை முறைமையில் மருந்துகளை பெற்றுக்கொள்பவர்களுக்கு, அந்த மருந்துகளை அவர்களின் வீடுகளுக்கே விநியோகிக்கும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்ட பணிகள், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ளன.