பொலிஸ் காவலில் வைக்கப்பட்ட இளைஞன் திடீர் மரணம்! பிரதி பொலிஸ்மா அதிபரின் விசேட பணிப்புரை
பூகொடை பொலிஸாரினால் சந்தேக நபராக கைது செய்யப்பட்ட 21 வயதான இளைஞன் உயிரிழந்தமை தொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பிரதி பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்கமைய, இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இந்த சம்பவ தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பூகொடை பொலிஸாரினால் நேற்று முன்தினம் 21 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனையடுத்து, குறித்த சந்தேநபர் சுகயீனமுற்ற நிலையில், நேற்றைய தினம் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.
இந்த நிலையிலேயே, இது தொடர்பில் விசேட விசாரணைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில், பொலிஸ் அதிகாரிகள் முறையற்ற விதத்தில் செயற்பட்டமை கண்டறியப்பட்டால், உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் குறிப்பிட்டார்.