மினுவாங்கொடை தொழிற்சாலையில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள்
மினுவாங்கொடை பிரெண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலை கொத்தணியில் நேற்றைய தினம் 90 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.
அவர்களில் 40 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், ஏனைய 50 பேரும் அவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, மினுவாங்கொடை கொத்தணியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 397 ஆக உயர்வடைந்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 844 ஆக அதிகரித்துள்ளது.
இதேநேரம், நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து மேலும் 10 பேர் நேற்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதன்படி நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 317 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.
ஆயிரத்து 512 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேநேரம், யாழ்ப்பாணம் - இயக்கச்சி தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 6 பேருக்கு நேற்று கொவிட்-19 தொற்றுறுதியானதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மன்னாரில் 5 பேர் கொவிட் 19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெரியக்கடை மற்றும் பட்டித்தோட்டம் ஆகிய இடங்கள் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் உள்ள 19 தனிமைப்படுத்தல் முகாம்களில் 952 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் ஏ.லதாகரன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் 107 பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டில் தற்போது கொவிட் 19 நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பதற்கான காரணமாக அமைந்துள்ள மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் சம்மந்தமான விசாரணைக்கு விசேடக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்ததொழிற்சாலை, கொவிட்19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உரியவகையில் முன்னெடுக்கவில்லை என்று பல்வேறு தரப்பினரால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் அந்தமுறைப்படுகள் குறித்து விசாரணை செய்வதற்காக தொழிற்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.