மாணவி ஒருவருடன் தகாத முறையில் நடந்துக்கொள்ள முயற்சித்தவருக்கு நேர்ந்த கதி...!
பாடசாலை சென்ற மாணவி ஒருவருடன் தகாத முறையில் நடந்துக்கொள்ள முற்பட்ட சம்பவத்தில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இந்த தீர்ப்பினை இன்று வழங்கியுள்ளார்.
தண்டனை வழங்கப்பட்ட கைதி திருகோணமலை, மொரவௌ, குணவர்தனபுர பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது
2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஜூன் மாதம் வரையில் அவர் இவ்வாறு நடந்துக்கொள்ள முயற்சித்துள்ளதாக அந்த மாணவி கல்வி பயிலும் பாடசாலையின் வகுப்பாசிரியையின் ஊடாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மூன்றாம் திகதி திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் அவருக்கு எதிராக குற்றப்பகர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் குறித்த நபருக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்த நிலையில, அவற்றில் இரண்டிலும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவருக்கு 7 வருட கடூழிய சிறை தண்டனை வழங்குமாறும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு இலட்சம் ரூபாய் நஷ்டஈடு செலுத்துமாறும், குறித்த பணத்தை செலுத்த தவறினால் மேலும் ஒரு வருடகால கடூழிய சிறை தண்டனை வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை அரசுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்துமாறு அந்த பணத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில் ஆறு மாத காலம் கடூழிய சிறை தண்டனை வழங்குமாறும் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.