நியூஸிலாந்தில் மீண்டும் கொவிட்-19 தொற்று: மக்கள் அச்சம்!

நியூஸிலாந்தில் மீண்டும் கொவிட்-19 தொற்று: மக்கள் அச்சம்!

கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினை சிறப்பாக கட்;டுப்படுத்திய நாடு என பாராட்டப்பட்ட நியூஸிலாந்தில் மீண்டும் கொரோனா வைரஸ் அச்சம் எழுந்துள்ளது.

இதன்படி, நியூஸிலாந்தில் இருவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக, உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது நாட்டில் புதிய நோய்த்தொற்றுகள் இல்லாத 24 நாட்கள் தொடர்ச்சியை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.

இவை இரண்டும் பிரித்தானியாவுக்கான பயணத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்களும் பிரித்தானியாவில் இருந்து பயணம் செய்திருந்தனர். அவர்களுக்கே இவ்வாறு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெற்றோரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அவர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது. எனினும், நோயாளிகள் பிரித்தானியா, நியூஸிலாந்து அல்லது வேறு இடங்களில் குடிமக்களா என்பது தெரியவில்லை.

நியூஸிலாந்து கடந்த வாரம் அனைத்து கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளையும் நீக்கியது. ஆனால் அதன் எல்லைகளை மூடி வைத்திருக்கிறது. இந்தநிலையில், நியூஸிலாந்தில் மீண்டும் கொரோனா வைரஸ் அச்சம் எழுந்துள்ளமையானது மக்களின் இயல்பு வாழ்க்கையை மீண்டும் பாதிக்க கூடுமோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

நியூஸிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றினால், 1,506பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களில் 22பேர் உயிரிழந்ததோடு மீதமுள்ளோர் குணமடைந்து வீடு திரும்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.