கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
வடக்கு அந்தமான் கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள கிழக்கு மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் விருத்தியடைந்த தாழமுக்கம் நேற்று (11ஆம் திகதி) நள்ளிரவில் வட அகலாங்கு 15.6N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 85.2E இற்கும் இடையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அது அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு ஆழமான தாழமுக்கமாக மேலும் வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (12ஆம் திகதி) நள்ளிரவில் இந்தியாவின் வடக்கு ஆந்திரப் பிரதேசக் கரையைக் கடக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு அந்தமான் கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள கிழக்கு மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் இன்றிலிருந்து அடுத்த சில நாட்களில் பலத்த அல்லது மிகக் கடுமையான காற்று, பலத்த மழைவீழ்ச்சி, கொந்தளிப்பான அல்லது மிகவும் கொந்தளிப்பான கடல் போன்ற நிலைமைகள் எதிர்பார்க்கப்படுவதாகவும் குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட ஆழம் கூடிய கடற்பரப்புகளில் 2020 ஒக்டோபர் 14ஆம் திகதி வரை மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது
மேலும், காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாகபொத்துவில் வரையான கடற்பரப்புகளில் ஒக்டோபர் 13ஆம் திகதி வரை மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆபத்தானது என மீனவர்கள் அறிவுறுத்தப்படுவதோடு, கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.