நாட்டில் காணப்படும் கொரோனா தொற்று குறித்த முழுமையான தகவல்..!

நாட்டில் காணப்படும் கொரோனா தொற்று குறித்த முழுமையான தகவல்..!

களனி பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் பீடத்தின் மாணவி ஒருவருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

அவரது தந்தை மினுவாங்கொடை பிரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்துள்ளதுடன் அவரும் இதற்கு முன்னர் கொரோனா வைரசால் பீடிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதற்கமைய குறித்த மாணவியிடமும் பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் அவருக்கும் தொற்றுறுதியாகியுள்ளது.

குறித்த மாணவி இறுதியாக கடந்த 30 ஆம் திகதி களனி பல்கலைக்கழகத்திற்கு சமூகமளித்துள்ளார்.

இதற்கமைய அவருடன் தொடர்பினை பேணிய இரண்டு மாணவிகள் பீ.சீ.ஆர் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக களனி பல்கலைக்கழைகத்தின் ஊடக பணிப்பாளர் சிரேஸ்ட விரிவுரையாளர் விஜயானந்த ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் மேலும் 4 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை முதலீட்டு சபை தெரிவித்துள்ளது.

அவர்களில் அதிகளவான தொற்றுறுதியானவர்கள் ஒரே ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எந்தவொரு கொவிட் 19 தொற்றுறுதியானவர்களும் காணாமல் போகவில்லை என காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசால் பீடிக்கப்பட்டுள்ள 119 பேர் காணாமல் போயுள்ளதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, அட்டன், பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரி, தற்காலிக தனிமைப்படுத்தல் முகாமாக இயங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கல்லூரியை இராணுவம் இன்று பொறுப்பேற்றதாக ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி கே. துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

அத்துடன், இங்கு தங்கியிருந்த கல்வி பயின்ற மாணவர்களுக்கு மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அவர்கள் பாதுகாப்பான முறையில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து இன்றைய தினம் மேலும் ஒருவர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.

இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 307 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அதேநேரம் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ள ஆயிரத்து 308 பேர் நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் இதுவரை 4 ஆயிரத்து 628 பேர் கொரோனா வைரசால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, முப்படைபியிரனரால் நடத்திச் செல்லப்படும் 92 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 10 ஆயிரத்து 224 பேர் தொடர்;ந்தும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் சமூக பணி, பட்டப்படிப்பு உள்ளிட்ட அனைத்து கற்கை நெறிகளின் விரிவுரைகளும் பிற்போடப்பட்டுள்ளன.

திகதி அறிவிப்பின்றி அனைத்து விரிவுரைகளும் பிற்போடப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ஷாமினி அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.