5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள செய்தி

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள செய்தி

இன்றைய தினம் நடைபெறவுள்ள 5ஆம் தரம் புலமைப்பரிசில் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் இதனை தெரிவித்தார்

கொவிட் 19 தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்கிலான சுகாதார பரிந்துரைகளுக்கு அமைவாக மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு முகக்கவசம் அணிந்து வருகைத்தருமாறு கோரப்பட்டுள்ளனர்

அத்துடன் 9.30க்கு பரீட்சை ஆரம்பிக்கப்படவுள்ளதால் பரீட்சார்த்திகள் தங்களது பரீட்சை மண்டபங்களுக்கு காலை 8.30க்கு முன்னர் சமூகமளிக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

அதேநேரம் இன்று இடம்பெறவுள்ள 5ஆம் தரம் புலமைப்பரிசில் பரீட்சைக்கான வினாத்தாள்கள் சகல வலயங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் குறிப்பிட்டார்.

இதேவேளை இன்றைய தினம் நடைபெறவுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்;சை என்பன நடைபெறவுள்ள பரீட்சை மத்திய நிலையங்கள் சுகாதார பாதுகாப்புடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இதனை எமது செய்தி பிரிவுக்கு குறிப்பிட்டார்.

பரீட்சைகள் தொடர்பில் பெற்றோர்கள் அச்சமடைய வேண்டிய அவியமில்லை.

இரண்டு பரீட்சைகளுக்கும், நாடு முழுவதும் சுமார் மூவாயிரம் பரீட்சை நிலையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன.

பரீட்சை நிலையங்கள் அனைத்தும், சுகாதார தரப்பினரால் முழுமையாக கண்காணிக்கப்பட்டு, சுகாதார பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக தொற்று நோய் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் சகல பரீட்சை நிலையங்களையும் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

அத்துடன், பரீட்சார்த்திகளுக்கு இடையில் 2. 5 மீற்றர் இடைவெளி பேணும் வகையில், பரீட்சை நிலையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

ஊரடங்கு அமுலாகும் பகுதிகளில் கல்விப் பொதுத் தராதர உயர்தர மற்றும் 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்க்ள, பரீட்சை அனுமதிப்பத்திரத்தை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தலாம் எனவும் காவல்துறை அறிவித்துள்ளது.

இதேவேளை, இன்று இடம்பெறவுள்ள 5 ஆம் தரபுலமை பரீசில் பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் 3 இலட்சத்து 31 ஆயிரத்து 694 பேர் தோற்றவுள்ளனர்.

இந்த பரீட்சையானது நாடளாவிய ரீதியில் 2 ஆயிரத்து 936 பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ளது.

கொவிட் 19 தாக்கம் காரணமாக ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் 12 விசேட பரீட்சை நிலையங்களும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் முகாம்கள் மற்றும் தேசிய தொற்று நோயியல் நிறுவகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்காக குறித்த 12 விசேட பரீட்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது