
சுகாதார அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல் -அவதானம் மக்களே
இலங்கையில் தற்போது கொரோனா தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலைகளுக்கு தேவையற்றவகையில் செல்ல வேண்டாமென சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அவ்வாறு வைத்தியசாலைகளுக்கு செல்பவர்கள் முகக் கவசங்களை அணிதல், ஒரு மீட்டர் சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் மற்றும் கை கழுவுதல் போன்ற சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் எஸ்.ஶ்ரீதரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள உறவினர்களை சந்திக்கச் செல்வதையும் முடிந்தளவு குறைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு பொருட்களை வழங்கும் சந்தர்ப்பத்தில், அவர்களை நேரடியாக விடுதிகளில் சந்திக்காது, வேறு வழிகளில் அவற்றை வழங்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், அத்தியாவசிய வைத்திய தேவைகளுக்கு, அருகிலுள்ள வைத்தியசாலைகளை நாடுமாறும் பதில் சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் எஸ்.ஶ்ரீதரன் கேட்டுக் கொண்டுள்ளார்.