மூடப்பட்ட மூன்று ஆடைத் தொழிற்சாலைகள்!
நாட்டில் சமூகத் தொற்றாக கொரோனா உருவெடுத்துள்ள நிலையில், கொரோனா வைரஸ் தொற்றியவர்கள் இருக்கின்றனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள மூன்று ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
இங்கு பணியாற்றிய ஊழியர்கள் தமது விடுதிகளில் தங்கியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து நிர்வாகத்தினர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
இந்த தொழிற்சாலைகளில் பணிப்புரிந்த ஊழியர்களை தமது விடுதிகளுக்கு செல்லுமாறு அறிவித்துள்ள போதிலும் அவர்களுக்கு சரியான சுகாதார பரிசோதனைகள் இன்னும் நடத்தப்படவில்ல என ஊழியர்கள் உரிமைகள் சம்பந்தமாக ஆராயும் ஸ்டேன்டர்ட் முவமன்ட் இலங்கை அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஷிலா தந்தெனிய தெரிவித்துள்ளார்.
இந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுடன் ஒரே விடுதியில் தங்கியிருக்கும் ஏனைய நிறுவனங்களின் ஊழியர்கள் இன்று கடமைக்கு சென்றுள்ளதாகவும் இது ஆபத்தான நிலைமை எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், தொழிற்சாலைகளின் பணிப்புரியும் ஊழியர்களின் சுகாதார நிலைமை சம்பந்தமான சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டும் என்ற போதிலும் அவர்கள் பொறுப்பின்றி செயற்பட்டுள்ளதாக சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் பொது சேவை ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் அன்டன் மாகஸ் தெரிவித்துள்ளார்.