
மஸ்கெலியாவிலிருந்து தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்ட மூவர்!
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொக்கா தோட்டத்தில் மிட்லோஜியன் பிரிவில் இரண்டு குடும்பங்களைச்சேர்ந்த 17 பேர் கடந்த 7 ஆம் திகதி இரவு முதல் அவர்களின் வீடுகளுக்குள்ளேயே சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்ட நிலையில் நேற்றிரவு மூன்று பேர் கொரோனா தடுப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலைக்கு அருகாமையில் உள்ள குடியிருப்பில் தங்கியிருந்து தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றிய மஸ்கெலியா, மொக்கா தோட்ட மிட்லோஜியன் பிரிவைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களும், ஒரு யுவதியும் கடந்த 3 ஆம் திகதி புகையிரதத்தில் ஹட்டனுக்கு வந்து, அங்கிருந்து பஸ்ஸில் மஸ்கெலியாவுக்கு சென்றுள்ளனர்.
மினுவாங்கொட கொத்தணியில் ஏற்பட்ட கொரோனா பரவலையடுத்து மேற்படி மூவரும் அவர்களின் உறவினர்களும் இவ்வாறு தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் மினுவாங்கொடயில் இவர்கள் வசித்த குடியிருப்பு பகுதியில் தங்கியிருந்தவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, மேற்படி மூவரிடம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்காக அம்புலன்ஸ் மூலம் நேற்றிரவு ரந்தம்பே தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இவர்களின் உறவினர்கள் வீடுகளுக்குள்ளேயே தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.