வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை அழைத்துவருவதில் சிக்கல் –
வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவரும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சநிலைமை காரணமாக தனிமைப்படுத்தல் நிலையங்களில் ஏற்படும் இடப்பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதற்காக அரசாங்கம் குறித்த நடவடிக்கையினை எடுத்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, இன்று நள்ளிரவு 12 முதல் இந்த நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 374 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டிற்கு அழைத்துவரப்பட்டதாக விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்படி ஐக்கிய அரபு ராச்சியத்தில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 74 இலங்கையர்கள் எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ கே 648 எனும் விமானமூடாக நேற்று இரவு 11.20க்கு நாடு திரும்பியுள்ளனர்.
மேலும் மாலைத்தீவில் இருந்து இலங்கையர்கள் 10 பேர் ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு எல் 104 எனும் விமானமூடாக நேற்று இரவு 10.45 க்கு நாடு திரும்பியுள்ளனர்.
அத்துடன் தென்கொரியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள் 285 பேர் KE-9473 எனும் விமானமூடாக இன்று அதிகாலை 3.15 அளவில் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
இதனிடையே குறித்த இலங்கையர்கள் அனைவரும் விமான நிலையத்தில் பி சி ஆர் பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்க அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.