4-வது வெற்றி யாருக்கு?: பெங்களூர் - டெல்லி அணிகள் துபாயில் பலப்பரீட்சை

விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் 4-வது வெற்றிக்காக துபாயில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

13-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபு தாபி, சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் 19-வது லீக் ஆட்டம் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

 

இரு அணிகளும் 3 வெற்றி, 1 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளன. இதனால் 4-வது வெற்றியை பெறப்போவது எந்த அணி என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றி பெறும் அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறும்.

 

பெங்களூர் அணி தொடக்க ஆட்டத்தில் ஐதராபாத்தை 10 ரன்னில் வென்றது. 2-வது போட்டியில் பஞ்சாபிடம் 97 ரன்னில் மோசமாக தோற்றது. 3-வது போட்டியில் மும்பையை சூப்பர் ஓவரில் வீழ்த்தியது. 4-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை 8 விக்கெட்டில் வென்றது.

அந்த அணியின் கேப்டன் விராட் கோலி நல்ல நிலைக்கு திரும்பி இருக்கிறார். முதல் 3 ஆட்டத்தில் சொதப்பிய அவர் ராஜஸ்தானுக்கு எதிராக 72 ரன் எடுத்தார். டி வில்லியர்ஸ், ஆரோன் பிஞ்ச், படிக்கல், ஷிவம் துபே, சாஹல் போன்ற சிறந்த வீரர்களும் பெங்களூர் அணியில் உள்ளனர்.

 

டெல்லி அணி முதல் 2 ஆட்டங்களில் பஞ்சாப் (சூப்பர் ஓவர்), சென்னையை ( 44 ரன்) வீழ்த்தியது. 3-வது போட்டியில் ஐதராபாத்திடம் 15 ரன்னில் தோற்றது. 4-வது ஆட்டத்தில் கொல்கத்தாவை (18 ரன்) தோற்கடித்தது.

 

டெல்லி அணியில் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர், பிரித்வி ஷா, ரி‌ஷப் பண்ட், ஸ்டாய்னிஸ், தவான் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும், ரபடா, ஆன்ரிச் நோர்ஜ், அமித் மிஸ்ரா போன்ற சிறந்த பந்துவீச்சாளர்களும் உள்ளனர்.

 

பெங்களூர் அணியும், டெல்லி அணியும் 4-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளன. இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் பெங்களூர் 14-ல், டெல்லி 8-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி முடிவு இல்லை.