மறு அறிவித்தல் வரை காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது...!
கம்பஹா - திவுலுபிட்டிய பகுதியில் கொவிட் 19 தொற்றுறுதியான பெண்ணின் 16 வயதுடைய மகளுக்கும் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
இன்று மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையில் அவருக்கும் கொவிட் 19 தொற்றுதி செய்யப்பட்டுள்ளது என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்ர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் ஹம்பராதுவ தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள அவரை ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கம்பஹா பகுதியில் எவரேனுக்கும் காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சென்று பீ.சீ.ஆர் பரிசோதனையினை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பதில் சுகாதார பணிப்பாளர் நாயகம், மருத்துவ நிபுணர் எஸ்.ஸ்ரீதரன் இதனை தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் தொற்றுறுதியான பெண்ணுடன் தொடர்பில் இருந்தவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
rn
இதற்கமைய நாட்டில் உள்ள அனைத்து அரசாங்க பாடாசலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது.
அதேநரம் நாட்டில் உள்ள அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து முன்பள்ளிகளும் நாளை முதல் மறு அறிவிப்பு வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, களனி பல்கலைக்கழகம், கம்பஹா விக்ரமாராச்சி ஆயுர்வேத நிறுவகம், நைவல உயர் தொழில்நுட்ப நிறுவகம் ஆகியவையும் நாளை முதல் தற்காலிகமாக மூடப்படவுள்ளன என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் மஹர மற்றும் நீர்கொழும்பு சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை வெளியாட்கள் சந்திப்பதற்கு தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் திணைக்களம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, மினுவங்கொடை, திவுலுபிட்டிய பகுதிகளில் வசிக்கும் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினரை சேவைக்கு சமூகமளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு நிலையம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் கம்பஹா மாவட்டத்தின் திவுலுபிட்டிய மற்றும் மினுவாங்கொடை ஆகிய காவற்துறை பிரிவுகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில் அங்கிருந்து வெளியேறுவதற்கும், குறித்த காவற்துறை பிரிவுகளுக்கு பகுதிகளுக்கு உட் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாளைய தினம் அரச நிறுவனங்களில் இடம்பெறும் பொது மக்கள் தினம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது சேவைகள், மாகாண சபை மற்றும் உள்ளாட்சி மன்ற அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய இந்த வாரத்தினுள் பொது மக்கள் தினம் இடம்பெறாது எனவும் அடுத்த வாரம் இடம்பெறுமா இல்லை என்பது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
மினுவங்கொடை, திவுலுபிட்டியவில் பயண அனுமதி தேவைப்படுவோர் 0718591617 அல்லது 071859162 என்ற இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொவிட் 19 உள்ளிட்ட தீர்மானங்களை மேற்கொள்வதற்கான சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப குழு கடந்த 2 மாதங்களாக கூடவில்லை என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பில் எமது செய்தி பிரிவிற்கு கருத்துரைத்த போது அந்த சங்கத்தின் மத்திய குழு உறுப்பினரும் ஊடக குழு உறுப்பினருமாறு வைத்தியர் வாசன் ரத்னசிங்கம் இதனைக் குறிப்பிட்டார்.