வானிலும் பறக்கும், கடலிலும் நீந்தும் 'அயன்' பறவை: எம்.ஐ.டி விஞ்ஞானிகளின் அசாத்திய கண்டுபிடிப்பு!
பறவைகளை போல வானில் பறக்கவும், அதே இறக்கைகளுடன் கடலுக்குள் மூழ்கி நீந்தவும் கூடிய அசாத்தியத் திறன் கொண்ட புதிய இருவாழ்வி ரோபோவை அமெரிக்காவின் எம்.ஐ.டி மற்றும் சுவிட்சர்லாந்தின் இ.பி.எஃப்.எல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து உருவாக்கியுள்ளனர்.
பறவைகளைப் போல வானில் ஜாலியாகப் பறந்து, திடீரெனக் கடலுக்குள் 'டைவ்' அடித்து மீன் பிடிக்கும் 'அட்லாண்டிக் பஃபின்' (Atlantic puffin) பறவைகளைப் பார்த்திருக்கிறீர்களா? காற்று, நீர் என முற்றிலும் வெவ்வேறான இரண்டு உலகங்களிலும் இந்த பறவைகள் எப்படி இவ்வளவு அசால்ட்டாக வலம் வருகின்றன என்பது விண்வெளி மற்றும் கடல் ஆராய்ச்சியாளர்களுக்கு நீண்ட காலக் கனவு.
காற்றை விடத் தண்ணீர் 1,000 மடங்கு அதிக அடர்த்தி கொண்டது. அதனால் காற்றில் பறக்கும் இறக்கைகள் தண்ணீருக்குள் போனால் உடைந்து விடும். ஆனால், இந்த விதியை உடைத்து, ஒரே ஒரு ஜோடி இறக்கைகளை மட்டுமே வைத்து வானிலும் பறக்கும், கடலிலும் நீந்தும் ஒரு அசாத்திய இருவாழ்வி ரோபோவை உருவாக்கி உலகையே அதிர வைத்துள்ளனர் அமெரிக்காவின் எம்.ஐ.டி, சுவிட்சர்லாந்தின் இ.பி.எஃப்.எல் பல்கலைக் கழக விஞ்ஞானிகள். இதற்கு முன்பு உருவாக்கப்பட்ட இருவாழ்வி ட்ரோன்கள் பல இறக்கைகள், புரோப்பல்லர்கள் எனப் பார்க்கவே படு எடலாக, சிக்கலாக இருக்கும். ஆனால், ரேஃபெல் சுஃபெரி தலைமையிலான குழு உருவாக்கியுள்ள இந்த ரோபோவின் எடை வெறும் 300 கிராம் தான்; அதாவது ஒரு பெரிய ஆப்பிள் பழத்தின் எடை. இதில் கூடுதல் என்ஜின்களோ, புரோப்பல்லர்களோ கிடையாது. கிட்டத்தட்ட 100 வகையான நீரில் மூழ்கும் பறவைகளை அக்குவேறு ஆணிவேறாக ஆராய்ச்சி செய்து, ஒரே ஒரு ஜோடி இறக்கைகளை மட்டுமே கொண்டு காற்றில் பறக்கவும், நீருக்குள் நீந்தவும் செய்யும் 'FAAV' என்ற அசாத்திய இயந்திரத்தை உருவாக்கியுள்ளனர்.
தண்ணீருக்குள் இறக்கைகள் உடையாமல் இருக்க விஞ்ஞானிகள் ஒரு செம ட்ரிக் செய்துள்ளனர். இந்த ரோபோவின் இறக்கைகள் கார்பன் ஃபைபரால் பலப்படுத்தப்பட்ட 'நெகிழ்வான சவ்வு' (flexible membrane wings) போன்றது. இது காற்றில் இருக்கும்போது பறப்பதற்கு ஏதுவாக ஸ்ட்ராங் ஆக இருக்கும். ஆனால், தண்ணீருக்குள் நுழைந்த அடுத்த நொடி, நீரின் அழுத்தத்தால் இந்த இறக்கைகள் தானாகவே 90 டிகிரி வரை வளைந்து கொள்ளும். இதனால் மோட்டாருக்கு ஏற்படும் சுமை குறைந்து, இறக்கைகளும் உடையாமல் தப்பிக்கின்றன. ரோபோவுக்குள் தண்ணீர் புகாமல் இருக்க ஹெவியான பாக்ஸ் ரெடி பண்ணுவதற்குப் பதிலாக, ரோபோவின் உடல் வழியே தண்ணீர் தாராளமாகப் புகுந்து செல்லும்படி 'ஓப்பன் பாடி' அமைப்பு உருவாக்கியுள்ளனர். அதற்கேற்ப மோட்டார், பேட்டரி, சென்சார்கள் என எல்லாவற்றையும் சிலிகான் கொண்டு தனித் தனியாக வாட்டர்ப்ரூஃப் செய்துள்ளனர். இதனால் ரோபோ தண்ணீரில் மூழ்காமலோ தானாக மிதக்காமலோ ஒரே இடத்தில் நிலையாக இருக்கும். மிதப்பதைத் தவிர்க்கப் போராட வேண்டிய அவசியம் இல்லாததால், பேட்டரி பவர் தாறுமாறாக மிச்சமாகிறது.
வாத்துக்கள் தண்ணீரில் இருந்து பறக்கும்போது கால்களால் தண்ணீரை வேகமாக உதைத்து ஓடி வருவதைப் பார்த்திருப்போம். விஞ்ஞானிகளும் இந்த ரோபோவுக்கு அதுபோன்ற கால்கள் தேவைப்படும் என்றுதான் நினைத்தனர். ஆனால், ஒரு சூப்பர் மெக்கானிக்கல் குறுக்குவழியைக் கண்டுபிடித்தனர். ரோபோவை செங்குத்தாக 70 டிகிரி கோணத்தில் மேல்நோக்கி நிறுத்தி, 1 நொடிக்கு 10 முறை இறக்கை அடிக்க வைத்தால், நீரின் இழுவிசையை உடைத்து வெறும் 'ஒரே ஒரு நொடியில்' அது தண்ணீரிலிருந்து நேராக வானிற்குள் பாய்ந்து விடுகிறது! இதனால் எடையுள்ள ரோபோடிக் கால்களின் தேவையே இல்லாமல் போய்விட்டது.
நீரில் மூழ்கும் பறவைகள் தண்ணீருக்குள் செல்லும்போது ஏன் தங்களது இறக்கைகளை சுருக்கிக்கொள்கின்றன என்ற விவாதம் விஞ்ஞானிகளிடையே நீண்ட காலமாக இருந்தது. ஆற்றலைச் சேமிக்கவா அல்லது வேகத்தை அதிகரிக்கவா? இந்த ரோபோ மூலம் சோதனை செய்ததில், இறக்கைகளை சுருக்குவது ஆற்றலை சேமிக்க அல்ல, மாறாக நீருக்குள் அசாத்திய வேகத்தில் நீந்துவதற்கும் வழிசெலுத்துவதற்கும் மட்டுமே என்பது நிரூபணமானது. அதாவது, பஃபின் பறவை தன் இறக்கைகளை சுருக்குவது எனர்ஜிக்காக அல்ல, ஸ்பீடுக்காக மட்டுமே. விலை உயர்ந்த கப்பல்களோ, மெதுவாக நகரும் நீர்மூழ்கி ரோபோக்களோ இனி தேவையில்லை. நொடிக்கு 6 மீட்டர் வேகத்தில் பறக்கக்கூடிய இந்த ரோபோக்களை ஒருமுறை சார்ஜ் செய்தால் 4 மைல் தூரம் பறக்க வைக்கலாம் அல்லது 1 மைல் தூரம் நீந்த வைக்கலாம். தொலைதூரத்தில் உள்ள பவளப்பாறைகள் அல்லது திமிங்கலக் கூட்டங்கள் இருக்கும் இடத்திற்கு இவற்றை அனுப்பி, நீரின் மாதிரிகள் மற்றும் வெப்பநிலையை நொடிப் பொழுதில் எடுத்து வர முடியும்.
மிக முக்கியமாக, விஞ்ஞானிகள் தங்களின் இந்த வடிவமைப்பை 'ஓப்பன் சோர்ஸ்' ஆக மாற்றியுள்ளனர். வெறும் $300 (சுமார் ரூ.25,000) மற்றும் ஒரு 3டி பிரிண்டர் இருந்தால், யார் வேண்டுமானாலும் தங்களுக்குத் தேவையான வான்-கடல் ரோபோக்களைத் தாங்களே உருவாக்கிக் கொள்ள முடியும். இயற்கை கொடுத்த ஐடியாவை வைத்து கடல் ஆராய்ச்சியில் ஒரு புதிய புரட்சிகரமான யுகத்தைத் தொடங்கியுள்ளனர் விஞ்ஞானிகள்.