ஏ.ஐ-க்கு அப்புறம் இதுதான்: எலான் மஸ்க்கிற்கு சவால் விடும் பிரைன்கோ; பி.சி.ஐ துறையில் உலகை ஈர்க்கும் சீனா
அமெரிக்கா - சீனா இடையே செயற்கை நுண்ணறிவுக்கு (AI) அடுத்தபடியாக மூளை-கணினி இடைமுகம் (BCI) எனும் நரம்புத் தொழில்நுட்பத்தில் கடுமையான போட்டி உருவாகியுள்ளது.
அமெரிக்கா - சீனா இடையேயான தொழில்நுட்ப ஆதிக்கப் போட்டி இதுவரை செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் செமிகண்டெக்டர் விநியோக சங்கிலிகளையே சுற்றியிருந்தது. ஆனால், தற்சமயம் 2 நாடுகளுக்கும் இடையே மற்றொரு முக்கியமான தொழில்நுட்பப் போட்டி தீவிரமடைந்து வருகிறது. அதுவே மூளை-கணினி இண்டர்பேஸ் (Brain-Computer Interface - BCI) என்ற நரம்புத் தொழில்நுட்பம் (Neuratech) ஆகும்.
மூளை-கணினி இண்டர்பேஸ் என்பது மனித மூளையில் இருந்து வரும் மின் சமிக்ஞைகளை (Brain Signals) சேகரித்து, அவற்றை கணினி அல்லது வெளிப்புற சாதனங்கள் புரிந்துகொள்ளும் கட்டளைகளாக மாற்றும் தொழில்நுட்பமாகும். இதன் மூலம் ஒருவர் சிந்திப்பதன் மூலமாகவே வெளிப்புற சாதனங்களைக் கட்டுப்படுத்த முடியும். இத்தொழில்நுட்பம் இன்னும் ஆரம்பக் கட்டத்திலேயே இருக்கிறது. ஏ.ஐ துறையில் குவியும் முதலீடுகளுடன் ஒப்பிடும்போது, பி.சி.ஐ நிறுவனங்கள் பெறும் முதலீடு மிகக் குறைவுதான். இருப்பினும், இத்துறையின் வளர்ச்சி தொடர்ந்து வேகமெடுத்து வருகிறது.
சமீபத்திய கண்டுபிடிப்புகள் மூலம், அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லரோசிஸ் (ALS) போன்ற நரம்பியல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தங்களின் மூளைச் சமிக்ஞைகளைப் பயன்படுத்தி தட்டச்சு செய்யவும், உரையாடவும், வீடியோ கேம்களை விளையாடவும் முடிகிறது. எலான் மஸ்க்கின் 'நியூராலிங்க்' நிறுவனம், மூளைக்குள் ஊடுருவும் வகையில் 'இம்ப்ளான்ட்' அறுவை சிகிச்சை சாதனங்களை உருவாக்கி உலகளவில் இத்துறையின் கவனத்தை ஈர்த்தது.
தற்போது நியூராலிங்க் நிறுவனத்திற்கு சவால்விடும் வகையில், புதிய நரம்பு தொழில்நுட்ப நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன. தலையோட்டைத் திறந்து மூளைக்குள் சாதனங்களைப் பொருத்துவதற்கு பதிலாக (Invasive), வெளிப்புறத்தில் இருந்தபடியே இயங்கும் பாதுகாப்பான நுட்பங்களை (Non-invasive) உருவாக்குவதில்தான் பி.சி.ஐ-ன் எதிர்காலம் உள்ளது என்று இவை நம்புகின்றன. இந்த வரிசையில் முன்னணி வகிக்கும் நிறுவனம் தான் சீனாவின் 'பிரைன்கோ' (BrainCo).
பிரைன்கோ (BrainCo) நிறுவனம் என்றால் என்ன? என்னென்ன தயாரிப்புகளை உருவாக்குகிறது? 2015-ல் ஹார்வர்ட் இன்னோவேஷன் லேப்ஸ்-ல் இருந்து (Harvard Innovation Labs) பிரிந்து தொடங்கப்பட்ட தொழில்நுட்ப நிறுவனம். சீனாவின் ஹாங்க்சௌ (Hangzhou) நகரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இது, சீனாவின் அதிகாரப்பூர்வ "ஆறு குட்டி டிராகன்கள்" (Six Little Dragons) என்ற முன்னணி ஸ்டார்ட்அப் பட்டியலில் ஒன்றாகும். பி.சி.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செயற்கை உறுப்புகள் (Prosthetics) மற்றும் அணியக்கூடிய மின்னணு சாதனங்களை (Wearables) பிரைன்கோ உருவாக்குகிறது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
சில தீவிர நரம்பியல் குறைபாடுகளுக்கு மூளைக்குள் செல்லும் சிகிச்சை முறைதான் தேவைப்படும். ஆனால், ஆபத்து இல்லாத, குறைந்த செலவிலான மற்றும் மக்கள் எளிதில் ஏற்றுக்கொள்ளக்கூடிய 'Non-invasive' முறைகள் மூலமே பெரும்பாலான பயன்பாடுகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்கிறார் பிரைன்கோ துணைத் தலைவர் நிக்ஹே (Nyx He). கை துண்டிக்கப்பட்டவர்களின் நரம்பு, தசைகளின் மின் சமிக்ஞைகளை கண்டறிந்து, விரல்களின் அசைவுகளாக மாற்றும் பயோனிக் கரங்களை பிரைன்கோ உருவாக்கியுள்ளது. இதற்கு அமெரிக்காவின் எப்.டி.ஏ ஒப்புதல் கிடைத்துள்ளது. குறைந்த அளவிலான மின் துடிப்புகள் (Electrical Pulses) மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கும் நரம்பு வேதிப்பொருள்களைத் தூண்டி, நல்ல தூக்கத்தைப் பெற சாதனம் உதவுகிறது. ஆட்டிசம், கவனக்குறைவு கோளாறு (ADHD), தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளைக் குணப்படுத்த சிறப்பு ஹெட்செட்களை உருவாக்கி உள்ளது.
பிரபலமான GLP-1 போன்ற மருந்துகள் பசியைக் கட்டுப்படுத்துவது போல, BCI தொழில்நுட்பம் மூலம் பசியைக் கட்டுப்படுத்தி எடையைக் குறைக்கும் புதிய சிகிச்சையை பிரைன்கோ உருவாக்கி வருகிறது. இது 2027 அல்லது 2028-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐடிஜி கேபிட்டல் (IDG Capital), இன்டெல் (Intel) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி லிப்-பு டான் நிறுவனத்தின் வால்டன் இன்டர்நேஷனல் (Walden International) ஆகியவை இணைந்து நடத்திய நிதியளிப்பு சுற்றில், பிரைன்கோ நிறுவனம் 2 பில்லியன் யுவான் ($280 மில்லியன்) நிதியைத் திரட்டியுள்ளது.
வெளியேயிருந்து மூளைச் சமிக்ஞைகளைப் படிப்பது மிகவும் சவாலானது; ஏனெனில் அச்சமிக்ஞைகள் பலவீனமாகவும் தெளிவற்றதாகவும் இருக்கும். இதற்காக பிரைன்கோ 'உலர் மின்முனை சென்சார்' (Dry electrode sensor) மற்றும் AI அல்காரிதம்களைக் கொண்டு மூளைச் சமிக்ஞைகளைத் துல்லியமாகக் கண்டறிகிறது. ஜெஃப்பரீஸ் (Jefferies) முதலீட்டு வங்கி வெளியிட்ட அறிக்கையில், "பொதுவாக உடலுக்கு வெளியே செயல்படும் BCI சாதனங்கள் சிக்னல்களைத் தெளிவாகப் பிடிப்பதில் வரம்புகளைக் கொண்டுள்ளன. நியூராலிங்க் போன்ற உடலுக்குள் அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்படும் சாதனங்களே அதிக நம்பிக்கையளிக்கின்றன. இருப்பினும், பிரைன்கோவின் சொந்த சென்சார்கள், ஏ.ஐ தொழில்நுட்பம் அந்நிறுவனத்திற்கு நன்மையை வழங்குகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
காப்பீடு உள்ள சந்தைகளில் செயற்கை உறுப்புகள் தேவைப்படுபவர்களுக்குத் தயாரிப்புகளை வழங்கத் தொடங்கி, படிப்படியாக ADHD, மன அழுத்தம் போன்ற நோய்களுக்கான சிகிச்சைகளிலும், நுகர்வோர் பயன்பாட்டுச் சாதனங்களிலும் தடம்பதிக்கத் திட்டமிட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் மூளைத் தரவுகளைத் தங்கள் சேவையகங்களில் (Servers) சேமிப்பதில்லை என்றும், கவனச் செறிவுப் புள்ளிகள் (Concentration scores) போன்ற தரவுகள் பயனர்களின் சாதனங்களிலேயே (Locally) மட்டுமே சேமிக்கப்படும் என்றும் பிரைன்கோ உறுதி அளித்து உள்ளது.
பிரைன்கோ தவிர, ஸ்டேர்மேட் (StairMed), நியூரோஎக்ஸெஸ் (NeuroXess) மற்றும் ஜெஸ்டாலா (Gestala) போன்ற பல சீன நிறுவனங்களும் பி.சி.ஐ சாதனங்களை உருவாக்கி வருகின்றன. தண்டுவடக் காயங்களால் பாதிக்கப்பட்டவர்கள் கைகளின் செயல்பாட்டை மீட்க உதவும் உலகின் முதல் 'குறைந்தபட்ச ஊடுருவல் நுட்பம் கொண்ட BCI சாதனத்திற்கு' (Minimally invasive BCI) சீன அரசு சமீபத்தில் வணிகரீதியான ஒப்புதலை வழங்கியுள்ளது. அமெரிக்க நிறுவனங்களுக்குப் போட்டியாக இத்துறையை உயர்த்த, சீனா தனது ஐந்தாண்டுத் திட்டத்தில் பி.சி.ஐ-யை ஒரு முக்கியமான எதிர்காலத் தொழில்துறையாக (Strategic Future Industry) அறிவித்துள்ளது. 2025 ஆகஸ்டில், 7 சீன அமைச்சகங்கள் இணைந்து பி.சி.ஐ தொழில்நுட்பத்தை 2027-க்குள் பெரிய அளவில் முன்னேற்ற சிறப்புத் திட்டத்தை வெளியிட்டன. மருத்துவமனைகள் மற்றும் பல்கலைக் கழகங்களுடன் பி.சி.ஐ நிறுவனங்கள் இணைந்து பணியாற்ற அரசு வழிவகை செய்துள்ளது. பி.சி.ஐ சிகிச்சைகளுக்கு எனத் தனியாக காப்பீட்டு பிரிவையும் (Insurance Category) உருவாக்கி, இத்தொழில்நுட்பம் மக்கள் மத்தியில் எளிதாகச் சென்றடைய சீனா நடவடிக்கை எடுத்துள்ளது.