ஈரான் தாக்குதலில் மேலும் ஒரு அமெரிக்க இராணுவ வீரர் பலி

ஈரான் தாக்குதலில் மேலும் ஒரு அமெரிக்க இராணுவ வீரர் பலி

வட ஈராக்கில் ஈரான் நடத்திய தாக்குதலில் தமது படைவீரர் ஒருவர் கொல்லப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. 

சுட்டு வீழ்த்தப்பட்ட ஈரானிய தாக்குதல் ஆளில்லா விமானம் ஒன்றில் இருந்த வெடிக்காத வெடிபொருளை கட்டுப்பாடான முறையில் வெடிக்கச் செய்த நடவடிக்கையின் போதே குறித்த அமெரிக்க வீரர் கொல்லப்பட்டதாகவும், இதில் இரண்டாவது படைவீரர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது. 

ஜோர்தானில் உள்ள தளம் ஒன்றின் மீதான தாக்குதலில் இரண்டு அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டு மற்றொருவர் காணாமல் போன சம்பவம் இடம்பெற்று ஒருநாளுக்கு பின்னர் நேற்று இந்த உயிரிழப்பு பதிவாகியுள்ளது. 

கடந்த வெள்ளிக்கிழமை ஜோர்தானில் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தைத் தேடியதன் பின்னர், அடையாளம் காணப்படாத எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்த எச்சங்களை உறுதிப்படுத்துவதற்கான பரிசோதனை நடவடிக்கைகள் தொடர்வதாகவும் அமெரிக்க இராணுவம் கூறியுள்ளது. 

அமெரிக்காவும் ஈரானும் தொடர்ந்து எட்டாவது நாளாகத் தமக்கு மத்தியில் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வரும் நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

அண்மை நாட்களில் இரு தரப்பினரும் முக்கியமான உட்கட்டமைப்பு வசதிகள் மீது தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். 

இதேவேளை, ஆரம்பகட்ட போர்நிறுத்தம் அமுலுக்கு வந்து ஒரு மாதத்திற்குள்ளேயே அது தோல்வியடைந்ததையடுத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான தனது முற்றுகையை வொஷிங்டன் மீண்டும் அமுல்படுத்தியுள்ளதுடன், ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள தெஹ்ரான், அப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகள் மீதும் இலக்கு வைத்துள்ளது. ​

இதுவரையான இந்த மோதலில் பலியான அமெரிக்கர்களின் எண்ணிக்கை தற்போது 17 ஆக அதிகரித்துள்ளது. 

அதேநேரம் கடந்த மூன்று வாரங்களில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் ஈரானில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.