யாழ். நல்லூர் ஆலய திருவிழாவின் போது ஐந்து விடயங்களுக்கு தடை!

யாழ். நல்லூர் ஆலய திருவிழாவின் போது ஐந்து விடயங்களுக்கு தடை!

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் போது இம்முறை ஐந்து விடயங்களுக்கு இறுக்கமான தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா தெரிவித்துள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

இந்தநிலையில் திருவிழாவிற்கான முன்னாயத்த ஏற்பாடுகள் குறித்த ஆரம்பகட்ட பூர்வாங்க கலந்துரையாடல் நேற்று (18) யாழ் மாநகர முதல்வர்  தலைமையில் யாழ்ப்பாண மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் இடம்பெற்றது.

 

ஐந்து இறுக்கமான தடைகள்

இங்கு கருத்து தெரிவித்த மாநகர முதல்வர், கடந்த காலங்களில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைய இம்முறை ஐந்து இறுக்கமான தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

யாழ். நல்லூர் ஆலய திருவிழாவின் போது ஐந்து விடயங்களுக்கு தடை! | Ban On Anti Cultural Events At Nallur Temple

 

1.உற்சவ காலங்களில் வியாபார நிலையங்களில் சினிமா பாடல்களை ஒலிக்க விடுதல், ஆடல் பாடல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுதல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு விதிமுறைகளை மீறுவோரின் ஒலி, ஒளி சாதனங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும்.

2. உற்சவ காலத்தில் தெய்வீக நிகழ்வுகள் சாராத காட்சிகள், காணொளிகள், விளம்பரங்களை திரையிடுதல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

3. உற்சவ காலத்தில் ஆலய சுற்றாடலில் படப்பிடிப்பில் ஈடுபடுபவர்கள் சமய பண்பாட்டு மற்றும் கலாசார நிகழ்வுகளைத் தவிர தனிநபர்களின் புகைப்படங்களை அல்லது காணொளிகளை பதிவு செய்தல் மற்றும் அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவதை முற்றாக தவிர்க்க வேண்டும்.

 

ட்ரோன் கமரா பறக்கவிடுதல்  

4. ஆலய சுற்றாடலில் ட்ரோன் கமரா பறக்க விடுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. இவ்விடயம் வர்த்தமானி அறிவித்தலின் மூலமும் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. அதனை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

யாழ். நல்லூர் ஆலய திருவிழாவின் போது ஐந்து விடயங்களுக்கு தடை! | Ban On Anti Cultural Events At Nallur Temple

5. சிவப்பு வெள்ளை நிறத்தால் குறிக்கப்பட்டுள்ள உற்சவ பகுதிக்குள் வியாபாரம் செய்தல் மற்றும் யாசகம் பெறுதல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. விதிமுறையை மீறுவோரின் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்.” என தெரிவித்தார்.

இக் கலந்துரையாடலில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினர், யாழ் மாநகர சபை ஆணையாளர், யாழ் மாநகரசபை உறுப்பினர்கள், துறைசார் அதிகாரிகள், மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.