14 ஆண்டு கால தேடல்: உலகிற்கு தெரிய வந்த புதிய வகை குரங்கு இனம்; ஆப்ரிக்காவில் அரிய கண்டுபிடிப்பு!
காங்கோ ஜனநாயகக் குடியரசின் அடர் மழைக்காடுகளில் 'கொலோபஸ் காங்கோயென்சிஸ்' என்ற புதிய குரங்கு இனம் கண்டறியப்பட்டுள்ளது. 75 ஆண்டுகளில் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட 5-வது புதிய குரங்கு இனமாகும்.
காங்கோ ஜனநாயகக் குடியரசின் டி.ஆர்.சி அடர் மழைக்காடுகளில் அறிவியல் உலகமே வியக்கும் வகையில் புதிய குரங்கு இனம் கண்டறியப்பட்டு உள்ளது. கடந்த 75 ஆண்டுகளில் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட 5-வது குரங்கு இனம் இதுவாகும். நவீன பிரைமேட் அறிவியல் வரலாற்றில் இது மிக அரிதான நிகழ்வாக கருதப்படுகிறது. புதிய குரங்கு இனத்திற்கு அறிவியல் பூர்வமாக கொலோபஸ் காங்கோயென்சிஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. உள்ளூர் மக்கள் இதனை "லிக்வேலி" என்று அழைக்கின்றனர்.
உடல் முழுவதும் பெரும்பாலும் கருப்பு நிறமாகவும், முகத்தைச் சுற்றி எடுப்பான ஆரஞ்சு நிறப் பட்டையுடனும் காணப்படுகிறது. இதன் நீண்ட வாலும், ஒளியைப் பிரதிபலிக்கும் பளபளப்பான முடியும், பெரிய மடிந்த காதுகளும், வாலுக்கு அருகில் இருக்கும் வெளிர் நிற அடையாளங்களும் பிற கொலோபஸ் குரங்குகளிடமிருந்து இதனை எளிதாக வேறுபடுத்திக் காட்டுகின்றன.சுமார் 15 பவுண்டுகள் எடை கொண்ட இந்த குரங்கு, தன் நெருங்கிய பிற குரங்கு இனங்களை விட அளவில் சிறியதாகும்.
இந்த குரங்கின் கண்டுபிடிப்பு பயணம் 2008-ம் ஆண்டில் தொடங்கியது. இப்பகுதியின் காங்கோ பேசின் தொலைதூரப் பகுதியில் எடுக்கப்பட்ட மங்கலான புகைப்படமே இதற்குப் பிள்ளையார் சுழி போட்டது.அதன் பிறகு, 10 ஆண்டுகள் கழித்துத்தான் விஞ்ஞானிகளால் இந்த விலங்கின் தெளிவான புகைப்படத்தைப் பெற முடிந்தது. அந்த 2-வது பதிவிற்கு பிறகு, மரபணு சோதனை, எலும்புக்கூடு ஒப்பீடுகள் மற்றும் குரங்கின் குரல் ஒலிப்பதிவுகள் உள்ளிட்ட தீவிர ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பிலாஸ் ஒன் என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வை, புளோரிடா அட்லாண்டிக் பல்கலைக்கழகம் (FAU), லுகுரு வனவிலங்கு ஆராய்ச்சி அறக்கட்டளை (Lukuru Wildlife Research Foundation), யேல் பல்கலைக்கழகம் (Yale University), நியூயார்க் நகர பல்கலைக் கழகம், லோமாமி தேசிய பூங்கா, பிராங்க்பர்ட் விலங்கியல் சங்கம் போன்ற சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு இணைந்து நடத்தியுள்ளது.
இந்த குரங்கு கிழக்கு மத்திய டி.ஆர்.சி-யில் உள்ள லோமாமி மற்றும் காங்கோ நதிகளுக்கு இடைப்பட்ட, ஏற்கனவே வனவிலங்குகளுக்குப் புகழ்பெற்ற தொலைதூரக் காட்டுப் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்களின் கருத்துக்கள் ஜூனியர் அம்போகோ (பி.எச்.டி மாணவர் & நேஷனல் ஜியோகிராபிக் எக்ஸ்ப்ளோரர்) இந்த கண்டுபிடிப்பு எனது தாய்நாட்டின் அசாதாரண பல்லுயிர் பெருக்கத்தை உலகிற்கு உணர்த்துகிறது. காங்கோ நாட்டின் பெயரைக் கொண்டு நேரடியாகப் பெயரிடப்பட்ட முதல் குரங்கு இனம் இதுவாகத்தான் இருக்கும்.
விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஆய்வு செய்து வரும் பகுதிகளில் கூட, இன்னும் முற்றிலும் புதிய உயிரினங்கள் வெளிச்சத்திற்கு வந்து கொண்டே இருக்கின்றன. இந்த பிராந்தியத்தைப் பற்றி நாம் கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் நிறைய உள்ளது என்பதை இது காட்டுகிறது. மரபணு திருப்பம் மற்றும் பரிணாம வளர்ச்சி விஞ்ஞானிகள் நடத்திய மரபணு சோதனையில் ஒரு ஆச்சரியமான உண்மை தெரியவந்துள்ளது. இந்த குரங்கின் மிக நெருங்கிய உறவினரான 'கொலோபஸ் சடனாஸ்' என்ற இனம், இதிலிருந்து 1,200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேற்கு மத்திய ஆப்ரிக்காவில் வாழ்கிறது.இருப்பினும், இந்த இரண்டு இனங்களும் சுமார் 4 முதல் 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு பொதுவான மூதாதையரிடமிருந்து பிரிந்தவை ஆகும்.
கொலோபஸ் குடும்ப மரத்திலேயே பதிவு செய்யப்பட்ட மிக பழமையான பிரிவுகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.அழிந்துவரும் ஆபத்தில் புதிய இனம் FAU-வின் உயிரியல் அறிவியல் இணைப் பேராசிரியர் கேட் டெட்வைலர் எச்சரிக்கையில், சில அரிய விலங்குகள் அறிவியல் உலகிற்குத் தெரியவரும் முன்பே அழிந்துபோகக்கூடும் என்பதற்கு இதுவொரு நிதர்சனமான நினைவூட்டல்" என்று கூறியுள்ளார். 2018 முதல் 2022 வரை, ஆராய்ச்சியாளர்களால் குரங்குகள் 114 முறை மட்டுமே பார்க்கப்பட்டுள்ளன. இவை வெறும் 1,700 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்குள் மட்டுமே வாழ்கின்றன. நதிகளும் அடர்ந்த காடுகளும் இவற்றுக்கு இயற்கை எல்லைகளாக அமைந்து, மற்ற பகுதிகளிலிருந்து இவற்றைத் தனிமைப்படுத்தியுள்ளன.
சிறிய வாழிடம், குறைந்த மக்கள்தொகை, காடழிப்பு மற்றும் வேட்டையாடுதல் ஆகியவற்றால் இந்த இனம்பெரும் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது. இதன் மிகக்குறைந்த பரவல் மற்றும் அச்சுறுத்தல்கள் காரணமாக, 'கொலோபஸ் காங்கோயென்சிஸ்' குரங்கை IUCN சிவப்புப் பட்டியலில் அழிந்துவரும் இனம் எனப் பட்டியலிட ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.தற்போது இந்த குரங்கின் பெரும்பான்மையான வாழிடம் லோமாமி தேசிய பூங்காவிற்குள் அமைந்திருப்பதால், பூங்காவைப் பாதுகாப்பதே இந்த புதிய உயிரினத்தை காப்பாற்றுவதற்கான முக்கிய வழியாகும். காங்கோ இன்னும் பல ரகசியங்களைத் தன்னுள் வைத்துள்ளது என்பதற்கும், புதிய பாலூட்டிகளைக் கண்டறிவதில் பூமியின் கடைசிப் பெரு எல்லைகளில் ஒன்றாக இப்பகுதி திகழ்கிறது என்பதற்கும் இந்த கண்டுபிடிப்பே சான்றாகும்.