எதிர்கால சந்ததிக்காக கோட்டாபய எடுத்துள்ள நடவடிக்கை

எதிர்கால சந்ததிக்காக கோட்டாபய எடுத்துள்ள நடவடிக்கை

எதிர்கால உலகிற்கும் பொருளாதாரத்திற்கும் அபிவிருத்திற்கும் பங்களிப்பு செய்யக்கூடியவாறு கல்வித்துறையில் மறுசீரமைப்புக்கள் ஏற்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்தியுள்ளார்.

கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகம், தொலைக்கல்வி ராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக பாடநெறி, தொழிற்சந்தையை இலக்காக கொண்டதாக அமையவேண்டும். தொழிநுட்ப கல்வி, தகவல் தொழிநுட்ப பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்கள் வெறுமனே பட்டங்களை வழங்கும் நிறுவனங்களாக மாத்திரம் இருக்க முடியாது. பொருளாதாரத்திற்கும் பட்டதாரிகளுக்கு அதன் பயன்கிட்ட வேண்டும். பிரயோக செயற்பாடுகளுக்கு முன்னுரிமை அளித்தே புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளை பணித்துள்ளார்.

எதிர்கால சந்ததியினரை பயனுள்ள பிரஜைகளாக மாற்றியமைப்பதற்கு அவர்கள் அறிவில் சிறந்தவர்களாகவும் திறமையானவர்களாகவும் போசிக்கப்பட வேண்டும். முன்பள்ளிகள் முதல் உயர் கல்வியைப் பூர்த்தி செய்யும் வரை மாணவர்கள் கல்வியை இடை நடுவில் கைவிடக் கூடிய வாய்ப்புக்களை ஏற்படுத்தாமல் தெளிவான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.

தொழிநுட்ப கல்விக்கு கூடுதலான வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதுடன் கல்வி செயற்பாடுகளில் தொழிநுட்ப பயன்பாட்டை விரிவுபடுத்தவேண்டும். கல்வித்துறை சார்ந்த சகல நிறுவனங்களும் ஒரே அமைச்சின் கீழ் இந்த நோக்கத்தை நிறைவு செய்வதற்கே கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.