பல்கலைக்கழகங்களுக்குள் அதிகரிக்கும் பகிடிவதை -களத்தில் குதிக்கிறது புலனாய்வுப்பிரிவு
பல்கலைக்கழகங்களில் அதிகரித்துவரும் பகிடிவதையை தடுக்கும் நோக்கில் அரசாங்க புலனாய்வுச் சேவையை ஈடுபடுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பல்கலைக்கழகங்களில் பகிடிவதையை தடுப்பதற்கு, அரச புலனாய்வுச் சேவை மற்றும் ஏனைய புலனாய்வு அமைப்புகளின் உதவியைப் பெற்றுத் தருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு, பாதுகாப்பு அமைச்சு உறுதியளித்துள்ளது.
பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
பல்கலைக்கழகங்களில் பகிடிவதையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக, எட்டு பேர் கொண்டகுழு கடந்த வாரம் சமர்ப்பித்த அறிக்கையை அடுத்தே, பாதுகாப்பு அமைச்சின் உதவியை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.
குற்றம் ஏதும் நிகழ்ந்தால் அல்லது, நிர்வாகம் அழைப்பு விடுத்தால் தவிர, வழக்கமாக பல்கலைக்கழக வளாகங்களுக்குள் பொலிசார் நுழைவதில்லை.
இந்த நிலையிலேயே, பகிடிவதையை ஒழிப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்ட போது, அரச புலனாய்வுச் சேவையின் உதவியை கோருவதற்கு அவர்கள் இணக்கத்தை தெரிவித்தனர் என்று, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, பல்கலைக்கழக பாதுகாவலர்களுடன் புலனாய்வு சேவைகள் ஒருங்கிணைந்து செயற்பட்டு, தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் என்றும், பகிடிவதைகளில் ஈடுபடுவோரைக் கைது செய்வதற்கு பொலிசாருக்கு உதவிகளை வழங்கும் என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் சம்பத் அமரதுங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.