ஜெனீவா - நிகழ்ச்சி நிரலில் நிராகரிக்கப்பட்டதா ஸ்ரீலங்கா?

ஜெனீவா - நிகழ்ச்சி நிரலில் நிராகரிக்கப்பட்டதா ஸ்ரீலங்கா?

எதிர்வரும் 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஜெனீவா மனித உரிமைச் சபையின் அமர்வில் இம்முறை ஸ்ரீலங்கா ஒற்றையாட்சி அராங்கம் பற்றிய விவகாரம் நிகழ்ச்சி நிரலில் உள்ளீர்க்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

சுவிஸ்லாந்தின் தலைநகர் ஜெனீவாவில் எதிர்வரும் 14ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள கூட்டத் தொடர் ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி வரை இடம்பெறுமென நிகழ்ச்சி நிரலில் கூறப்பட்டுள்ளது.

மியன்மார், ஜேர்மன், கம்போடியா, கொங்கோ, வெனிசுலா, சிரியா, தென்சூடான் ஆகிய நாடுகளின் விவகாரங்களும் மற்றும் மரண தண்டனைச் சட்டங்கள் பற்றிய விவகாரங்களோடு நாடுகளின் மனித உரிமைகள் பற்றிய விடயங்களுமே நிகழ்ச்சி நிரலில் குறிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா தொடர்பான பிரேரணையில் கூறப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்ற ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்குக் கொடுக்கப்பட்ட இரண்டு வருட கால அவகாசம் முடிவடைந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டின் நவம்பரில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஆகவே அதன் காரணமாக ஸ்ரீலங்கா விவகாரம் இம்முறை அமர்வில் தவிர்க்கப்பட்டதா அல்லது நாடுகளின் மனித உரிமைகள் பற்றிய விவகாரங்கள் பேசப்படும்போது ஸ்ரீலங்கா விவகாரம் எடுக்கப்படுமா? என்பது குறித்து எதுவுமே அறிய முடியவில்லை.

இதேவேளை, ஸ்ரீலங்காவின் வெளிவிவகார அமைச்சு நடைபெறவுள்ள ஜெனீவா அமர்வு பற்றி இதுவரை எந்தவித கருத்தையும் வெளியிடவில்லை.

2015ஆம் ஆண்டு மைத்திரி – ரணில் அரசாங்கம் பதவி ஏற்ற போது ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா தொடர்பான பிரேரணைக்கு ஸ்ரீலங்காவின் அப்போதைய அரசாங்கம் இணை அனுசரணை வழங்கி இருந்தது.

அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தது.

நிலைமாறு கால நீதி வலியுறுத்தப்பட்டிருந்த நிலையில், அரசியல் தீர்வுகான ஆரம்பமாக 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அந்த பிரேரணையில் கூறப்பட்டிருந்தது.

இதனை நிறைவேற்றுவதற்காக முதல் இரண்டு ஆண்டுகளும் அதன் பின்னரான இரண்டாண்டுகளுமாக மொத்தம் நான்கு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இவ்வாறான ஒரு நிலையிலேயே 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மைத்திரி – ரணில் அரசாங்கம் பதவி இழந்ததை தொடர்ந்து கோட்டா-மஹிந்த தலைமையிலான அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறிய நிலையில் ஜெனீவா அமர்வில் ஸ்ரீலங்கா தொடர்பிலான விவகாரங்கள் உள்ளீர்க்கப்படாதுள்ளது.

ஸ்ரீலங்காவில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தின் பின்னர் இம்முறை கூடுகின்ற ஜெனீவா அமர்வில் ஸ்ரீலங்கா தொடர்பிலான விவகாரங்கள் சேர்க்கப்படாதிருப்பது பாரிய விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.