
கடும் காற்று : 26 வீடுகள் பகுதியளவில் சேதம்
திருகோணமலை மாவட்டத்தில் நேற்று வீசிய கடும் காற்றுக்காரணமாக 26 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் குகதாஸ் சுகுணதாஸ் இதனைக் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய மொரவௌ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 16 வீடுகளும் கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவில் 5 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் 4 வீடுகளும் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு வீடும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இந்தநிலையில் பாதிப்பு குறித்த அடிப்படை மதிப்பீடு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலாளரால் பாதிப்பு குறித்த அடிப்படை மதிப்பீடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான நட்டஈடு விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் குகதாஸ் சுகுணதாஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வவுனியா - கணேசபுரம் பகுதியில் நேற்று மதியம் மழையுடன் வீசிய கடும் காற்றினால் பல வீடுகள் பகுதியளவில் சேதசமடைந்துள்ளன.
குறித்த காற்றினால் கணேசபுரத்தில் 34 வீடுகளும் சமயபுரத்தில் 4 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
குறித்த வீடுகளின் கூரைத்தகடுகள் காற்றில் அள்ளுண்டு சென்றுள்ளன.
இதனால் அந்த வீடுகளில் வசித்தவர்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
அத்துடன் பலத்த காற்றால் வாழை தென்னை போன்ற பயன் தரும் மரங்களும் முறிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் பாதிப்பு விபரங்கள் தொடர்பாக வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தகவல்களை சேகரித்து வருகின்றது.