விளக்கமறியலில் உள்ள கைதிகளை புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்ப திட்டம்..!

விளக்கமறியலில் உள்ள கைதிகளை புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்ப திட்டம்..!

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளை, வேறு புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்புவது குறித்து அவதானம் செலுத்துவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அண்மைக்காலங்களில், போதைப்பொருள் குற்றங்கள் தொடர்புடையவர்களை விளக்கமறியலில் வைத்தல் மற்றும் சிறைவைத்தல் என்பன குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர், போதைப்பொருள் குற்றம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது வரையில் விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை விடவும் அதிகமாக உள்ளது.

இந்த நிலையில், அவர்களில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில், விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்கள் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறிருப்பினும், விளக்கமறியல் சிறைச்சாலையில், சுமார் 11 ஆயிரம் பேருக்கே வசதிகள் உள்ளமையினால், தற்போது அங்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், சிறைச்சாலை வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமையினால், இரசியமான முறையில் சிறைச்சாலைக்குள் போதைப்பொருட்களை கொண்டுசெல்வது தடுக்கப்பட்டுள்ளமையினால், கைதிகள் குழப்பம் விளைவிக்கும் நிலை ஏற்படுவதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருளை பயன்படுத்தி இருந்த கைதிகள் 3 பேர், அண்மையில் தற்கொலை செய்துகொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து எமது செய்திச் சேவை வினவியபோது பதிலளித்த சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனிய, இந்த நிலைமையை முகாமைத்துவம் செய்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.