மின் துண்டிப்பு விவகாரம்- குழுவின் அறிக்கை தொடர்பில் இன்று விசேட விசாரணை
நாடு பூராகவும் பாதிப்பு ஏற்படும் வகையில் அண்மையில் இடம்பெற்ற மின்சாரத் தடை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை, விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் டலஸ் அழகப்பெருமவால் இன்றைய தினம் விசேட விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளது.
இதனையடுத்து அந்த அறிக்கை நாளைய தினம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
மின்சார தடை தொடர்பில் ஆராய்வதற்காகவும் அவ்வாறான தடை மீண்டும் ஏற்படாத வகையில் தடுப்பதற்கான வழிமுறைகளை இனங்கண்டு கொள்வதற்காக குறித்த குழு நியமிக்கப்பட்டது.
பேராசிரியர் ராகுல அத்தலகேவின் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டதுடன் அதில் 9 பேர் அங்கம் வகிக்கின்றனர்.
குறித்த குழுவின் அறிக்கை நேற்றைய தினம் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் டலஸ் அழகப்பெருமவிடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.