தென்னிலங்கையில் பலத்த சலசலப்புக்களை ஏற்படுத்திய விக்னேஸ்வரனின் உரை! உண்மையான வரலாற்றை நாட்டு மக்களுக்கு சொல்லத் தயாரா?

தென்னிலங்கையில் பலத்த சலசலப்புக்களை ஏற்படுத்திய விக்னேஸ்வரனின் உரை! உண்மையான வரலாற்றை நாட்டு மக்களுக்கு சொல்லத் தயாரா?

ஸ்ரீலங்காவின் 9ஆவது நாடாளுமன்றின் முதலாவது அமர்வில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் சபாநாயகருக்கு வாழ்த்துத் தெரிவித்து உரையாற்றியதை ஹன்சாட்டிலிருந்து நீக்க வேண்டும் என்று கூறுபவர்கள் உண்மையான வரலாற்றை நாட்டு மக்களுக்கு சொல்லத் தயாரா என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப்பேச்சாளரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

விக்னேஸ்வரனின் நாடாளுமன்ற உரை தொடர்பில் எழுந்துள்ள எதிர்ப்புக்கள் குறித்த அறிக்கையிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியிள்ளார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் புதிய நாடாளுமன்றின் முதல் அமர்வில் முதன் முதலாக ஆற்றிய கன்னி உரை நாடாளுமன்றத்திலும் தென்பகுதியிலும் பலத்த சலசலப்புக்களை ஏற்படுத்தி இருக்கின்றது.

தமிழ் மிகவும் தொன்மையான மொழி என்றும் இலங்கையில் மூத்தகுடிமக்களாக தமிழர்களே இருந்தார்கள் என்றும் அவ்வாறான மக்களுக்கு இறையாண்மை இருப்பதாகவும் நாடாளுமன்றில் அவர் தெரிவித்த கருத்தினை சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஜீரணித்துக் கொள்ளமுடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக ஐக்கிய மக்கள் சக்தியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மனுச நாணயக்கார தனது உரையில், விக்னேஸ்வரனின் கருத்து சிங்கள மக்களுக்கு எதிரானது என்ற தொனியில் அதனை விமர்சித்ததுடன், அவரது உரை ஹன்சாட்டில் இருந்து நீக்கப்படவேண்டும் என்றும் கூறியுள்ளார் எனவும் தெரிவித்திருந்தார்.