பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா ஏற்பட்டால் உயிரிழக்கும் அபாயம்! வைத்திய நிபுணர் சுதத் சமரவீர

பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா ஏற்பட்டால் உயிரிழக்கும் அபாயம்! வைத்திய நிபுணர் சுதத் சமரவீர

தொற்றுநோயற்ற அல்லது பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டால் அவர்கள் உயிரிழக்கும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொற்று நோயியல் பிரிவின் தலைமை நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர இதனை தெரிவித்துள்ளதாக கொழும்பு சிங்கள் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் ஏற்பட்ட கொரோனா உயிரிழப்புகளில் கவனம் செலுத்தும்போது இந்த இயல்பு மிகவும் தெளிவாக தெரிவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கொழும்பில் உள்ள ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையில், கொரோனா தொற்றினால் உயிரிழந்த பெண்ணின் இறுதி சடங்குகள் இன்று பிற்பகல் இடம்பெற்றிருந்தன.

கொட்டிகாவத்தை பொது மயானத்தில் சுகாதார பரிந்துரைகளின்படி இறுதி சடங்குகள் இடம்பெற்றிருந்தன. அவரது குடும்பத்தின் உறவினர்கள் சிலர் மட்டுமே இதில் கலந்துகொண்டனர்.

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த 12வது நபர் இவராவார். குருநாகலை - மாவத்தகமை பகுதியை சேர்ந்த 47 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

இவர் கடந்த 20ம் திகதி இந்தியாவில் இருந்து நாடு திரும்பியிருந்தார்.

குறித்த பெண் ஆறு மாதங்களுக்கு முன்பு புற்றுநோய்க்கு சிகிச்சை பெற இந்தியா சென்றதுடன், நீரிழிவு நோய்க்கும் சிகிச்சை பெற்று வந்ததாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, உயிரிழந்த பெண்ணின் கணவரும் தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.