ரயில் சேவை வருமானம் படிப்படியாக முன்னேற்றம்- ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் தெரிவிப்பு

ரயில் சேவை வருமானம் படிப்படியாக முன்னேற்றம்- ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் தெரிவிப்பு

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து குறைவடைந்த ரயில் திணைக்களத்தின் நாளாந்த வருமானம், தற்போது படிப்படியாக அதிகரித்து வருகின்றது என ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாளாந்தம் தூரப் பயண சேவையை பயன்படுத்தும் பயணிகள் மூலமே அதிகளவான வருமானத்தை ரயில்வே திணைக்களம் பெற்று வந்திருந்தது. கடந்த காலத்தில் குறைந்து காணப்பட்ட தூர பயணிகளின் வருகையானது தற்போது படிப்படியாக மீண்டு வருகின்றது.

கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்னரான காலப்பகுதியில் ரயில்வே திணைக்களத்தின் நாளாந்த வருமானம் 16 முதல் 18 மில்லியன் ரூபாவுக்கு இடையில் காணப்பட்டது.

ஆயினும், கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, அதன் வருமானம் ஆரம்ப கட்டத்தில் 5 மில்லியன் ரூபாவாகக் குறைவடைந்த நிலையில், தற்போது ரயில்வே திணைக்களத்தின் நாளாந்த வருமானம் 6 - 8 மில்லியன் ரூபாவுக்கு இடையில் காணப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.