வடக்கு ஆளுநராக இராணுவ அதிகாரி - மீள் பரிசீலணை செய்ய கோரிக்கை
வடக்கு மாகாண ஆளுநராக இராணுவ அதிகாரியை நியமிப்பதை மீள் பரிசீலணை செய்யுங்களென ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் குறித்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வடக்கு மாகாணத்திற்கான ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளதாகவும், அவர் கடந்த காலங்களில் வவுனியா இராணுவ தலைமையக கட்டளை அதிகாரியாக செயற்பட்டு வந்தவர் எனவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு வடக்கு மாகாணத்திற்கான ஆளுநராக இராணுவ அதிகாரி ஒருவரை நியமிப்பது தொடர்பில் மீள் பரிசீலணை செய்ய வேண்டும் என நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் நாம் பரிந்துரைப்பதாக தீர்மானம் எடுத்துள்ளோம்.
அந்த வகையில் குறித்த தீர்மானத்தை மீள் பரிசீலணை செய்யுமாறு நாம் ஜனாதிபதி மற்றம் பிரதமர் ஆகியோரிடம் வேண்டுகை விடுக்கின்றோம்.
கடந்த காலத்தில் ரெஜினோல்ட் குரே போன்றோர் சிறப்பாக செயற்பட்டார்கள். அதேபோன்று பொதுஜன பெரமுன கட்சியில் அமைச்சர்களாக இருந்த ஆளுமை மிக்க பலர் இருந்தார்கள். அவர்களை இன்னார் என்று அடையாளம் காட்டவில்லை. அவர்களில் சிறந்த ஒருவரை ஆளுநராக நியமிப்பது பொருத்தமானதென தெரிவிக்கப்பட்டள்ளது