இன்று நாட்டின் பல பாகங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 08 பேர் பலி..!
இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 08 பேர் உயிரிழந்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி இன்று அதிகாலை 4 மணியளவில் கொழும்பு - குருநாகல் பிரதான வீதியின் சிலாபம் - வலக்கும்புர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
டிப்பர் ரக வாகனம் ஒன்றும் மகிழூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.
வலக்கும்புர பகுதியில் மரண வீடொன்றுக்கு சென்று மீள குருநாகல் நோக்கி பயணித்த மகிழூர்தியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் மகிழுந்தில் பயணித்தவர்களே உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவத்தில் உயிரிழந்த 05 பேரும் கட்டுமான நிறுவனமொன்றில் தொழில் புரிபவர்கள் என கூறப்பட்டுள்ளது.
அதேபோல்,எல்ல-வெல்லவாய பிரதான வீதியின் இராவண எல்லை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் சிற்றூர்ந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இவ்வாறு 2 பேர் உயிரிழந்துள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.
காயமடைந்த நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 03 பேரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.