பழங்களுடன் மறைத்து துபாய் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த பெறுமதியான திரவியங்கள்

பழங்களுடன் மறைத்து துபாய் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த பெறுமதியான திரவியங்கள்

சந்தனம் மற்றும் வல்லப்பட்டை ஆகிய வாசனை திரவியங்களை சட்டவிரோதமாக துபாய் நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சியை இலங்கை சுங்க அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

மரவள்ளி கிழங்கு, பப்பாளி பழம், இளநீர் மற்றும் அன்னாசி பழங்களுக்கு இடையில் மறைத்து வைத்து இந்த வாசனை திரவியங்கள் சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்படவிருந்தன.

120 கிலோ கிராம் வல்லப்பட்டைகள், 120 கிலோ கிராம் சந்தனம் என்பன கொள்கலன் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தன. இவற்றின் பெறுமதி ஒரு கோடியே 25 லட்சம் ரூபாவுக்கும் மேல் என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒருகொடவத்தையில் உள்ள ஏற்றுமதி கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் பெட்டிகளை சோதனையிடும் போதே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கொள்ளுப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த ஒரு ஏற்றுமதியாளர் இவற்றை துபாய் நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய முயற்சித்துள்ளார்.

இதனையடுத்து ஏற்றுமதியாளர் உட்பட மூன்று பேரை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சுங்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.